Paristamil Navigation Paristamil advert login

பெண்களை திரிணமுல் காங்., வஞ்சித்து விட்டது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பெண்களை திரிணமுல் காங்., வஞ்சித்து விட்டது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

20 சித்திரை 2026 திங்கள் 13:36 | பார்வைகள் : 151


மகளிருக்கான, 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க சகோதரிகளுக்கு திரிணமுல் காங்., துரோகம் இழைத்து விட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால், பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

பாங்குராவில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க பெண்கள், 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரும்பினர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற நானும் உறுதியாக இருந்தேன். 2029ல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த விரும்பினோம்.

ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள பெண்கள், இங்குள்ள காட்டாட்சியை ஒழித்து கட்ட சவால் விடுத்ததால், அவர்கள் எம்.எல்.ஏ.,  எம்.பி., பதவிகளை வகிக்கக் கூடாது என, திரிணமுல் காங்., முடிவு எடுத்தது. அதனால் காங்கிரசுடன் கைகோர்த்து, லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடைய செய்தது.

மேற்கு வங்க சகோதரிகளுக்கு திரிணமுல் காங்., பெரிய துரோகம் இழைத்து விட்டது; மீண்டும் வஞ்சித்து விட்டது. மலைவாழ் பெண்களும், சகோதரிகளும் அரசியலுக்குள் நுழையக் கூடாது என, அக்கட்சி சதி செய்கிறது. ஆனால், பழங்குடியின பெண் ஒருவரை முதன்முறையாக நாட்டின் ஜனாதிபதியாக்கி பா.ஜ., அழகு பார்த்தது. அதையும் திரிணமுல் காங்., முறியடிக்க பார்த்தது.

மேற்கு வங்கத்திற்கு சமீபத்தில் ஜனாதிபதி முர்மு வந்தபோது, திரிணமுல் காங்., எப்படி எல்லாம் அவரை அவமதித்தது என்பதை ஒட்டுமொத்த நாடே பார்த்தது. இதற்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவர். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டை முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்தார். அவர் கூறுகையில், ''லோக்சபா, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு அதிகளவில் பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பது திரிணமுல் கட்சி தான். லோக்சபா எம்.பி.,க்களில் எங்கள் கட்சி சார்பில் இடம் பெற்ற பெண் எம்.பி.,க்கள், 37.9 சதவீதம் பேர். ராஜ்யசபாவில் எங்கள் கட்சி சார்பில், 46 சதவீத பெண் எம்.பி.,க்களை நியமித்துள்ளோம்,'' என்றார்.

திருத்த மசோதா தாக்கலானது ஏன்?


ஐந்து மாநில தேர்தலை கருதியே, லோக்சபாவில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை நிறைவேற்ற பா.ஜ., முயன்றதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது குறித்து, பா.ஜ., அளித்த விளக்கம்: கடந்த 2023ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை, 2026ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தான் அமல்படுத்த முடியும்.

இதனால், 2029 லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் மகளிருக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த முடியாது. குறித்த நேரத்தில் பெண்களுக்கு இந்த பலன் கிடைக்கும் வகையிலேயே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்து லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 1971ல், நம் நாட்டின் மக்கள் தொகை, 54 கோடி. அதற்கேற்ப, 1976ல் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை, 550 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை, 140 கோடியை கடந்து விட்டது.

எனவே தான், லோக்சபாவில், 550க்கு பதிலாக, 850 வரை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இந்த முடிவை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன என தெரியவில்லை. தொகுதி மறுவரையறை கமிஷன் அமைப்பதற்கான சட்டத்தில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போது உள்ள அம்சங்களே அதில் நீடிக்கின்றன. ஒருவேளை அதில் ஏதேனும் புதிய பரிந்துரைகளை சேர்க்க வேண்டும் என்றால், பார்லி., மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதல் தேவைப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பலுார்காட் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பித்யூத் ராயை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களுக்கு துரோகம் செய்து விட்டார்.

லோக்சபாவில் காங்கிரசுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டார். எனவே, இந்த தேர்தலில் பெண்கள் வாக்காளர்கள், அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். ஊடுருவல்காரர்களை ஓட்டுக்காக அவர் பாதுகாக்கிறார். பா.ஜ., ஆட்சி அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.