போக்சோ சட்டம் பழிவாங்கும் ஆயுதமாக மாறக்கூடாது; உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
4 ஆனி 2026 வியாழன் 11:02 | பார்வைகள் : 512
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், பெரியவர்களின் தனிப்பட்ட பகை, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான ஆயுதமாக மாறிவிடக் கூடாது'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக 'சிங்கப்பெண் விழிப்புணர்வு பயிலரங்கம்' என்ற பெயரில் மாநிலம் முழுதும் பயிற்சித் திட்டத்தை தமிழக அரசு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி போக்சோ நீதிமன்றங்களில் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 வெவ்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தன.
அவற்றை ஒன்றாக விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்குகளை ஆய்வு செய்ததில், குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு, வழக்கறிஞர்களின் மிரட்டல், கிராமத்துப் பகை காரணமாக, அப்பாவிச் சிறுமிகளை பயன்படுத்தி பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* திருச்சியில் டாக்டர் ஒருவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் ஒருவரின் மிரட்டல், துாண்டுதலின் பேரிலேயே சிறுமி புகார் அளித்தது மனநல ஆலோசகரின் அறிக்கையில் அம்பலமானது. அவ்வழக்கறிஞரின் கேரள பார் கவுன்சில் பதிவுச் சான்றிதழிலும் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், இவ்வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
* துாத்துக்குடியில் குடும்பப் பகை காரணமாக சிறுமியை வற்புறுத்தி புகார் அளிக்க வைக்கப்பட்டது உறுதியானதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மறுவாழ்வு, தொடர் மனநல ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும்.
* புதுக்கோட்டையில் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவருக்கு 'பாடம் புகட்ட' போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
* உசிலம்பட்டியில் கிராமப் பகை, முன்விரோதம் காரணமாக போட்டிப் புகாராக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது அம்பலமானது. உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய பரிசீலனை இன்றி இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. பொய் புகார் அளித்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
குழந்தைப் பருவம், பெரியவர்களின் பழிவாங்கும் போர்க்களம் அல்ல. போக்சோ சட்டத்தின் நோக்கம் வெறும் வழக்குகளைப் பதிவு செய்வதோ, தண்டனை பெற்றுத் தருவதோ மட்டுமல்ல. குழந்தைகளின் கண்ணியம், கல்வி, உளவியல் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வதே.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, உண்மையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீதியை பாதிப்பதுடன் நீதிமன்ற நேரத்தையும் வீணாக்குகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் இச்சட்டம், பெரியவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான ஆயுதமாக மாறிவிடக் கூடாது.
தமிழகத்தில் எஸ்.பி., அந்தஸ்து முதல் பெண் காவலர்கள் வரை மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் குழந்தைகளின் உளவியல், அவர்களை கண்ணியத்துடன் கையாளும் முறை, முறையான விசாரணை, பொய் புகார்களை கையாள்வது உள்ளிட்ட போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்து 'சிங்கப்பெண் விழிப்புணர்வுப் பயிற்சி' முகாம்களை சமூக நலத்துறை, சட்டத்துறையுடன் இணைந்து தமிழக உள்துறை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan