Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்

27 பங்குனி 2026 வெள்ளி 13:53 | பார்வைகள் : 186


பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்களுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, தங்கள் சொத்துக்களைச் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக மாற்றக்கூடும் என்று ஈரான் எச்சரித்திருப்பதாக, Fars செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அதன் கூட்டணிப் போராளிக் குழுக்களுடனான கூட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் பிராந்திய ஹொட்டல்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு இராணுவ வீரர்களை தங்க வைக்கப்படும் எந்தவொரு இடத்திற்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும், இதுபோன்ற செயல்பாடு தொடர்ந்தால் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெய்ரூட்டின் பழைய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தளவாடத் தளம் மற்றும் டமாஸ்கஸின் குடியரசு அரண்மனை, ஃபோர் சீசன்ஸ், ஷெரட்டன் ஹொட்டல்கள் ஆகியவற்றில் உள்ள ஆலோசனைச் செயல்பாடுகள் உட்பட, பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கும் இடங்களில் அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கக் கடற்படையினர் இந்த வாரம் இஸ்தான்புல் மற்றும் சோஃபியா வழியாக ஜிபூட்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வளைகுடா அரபு நாடுகளில் உள்ள விடுதிகள் அமெரிக்க இராணுவ வீரர்களைத் தங்க அனுமதிப்பதற்கு எதிராக ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி எச்சரிக்கை விடுத்தார்.

அந்த வீரர்கள் தங்கள் தளங்களிலிருந்து தப்பி ஓடி, பொதுமக்கள் சார்ந்த இடங்களைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அதிகாரிகளுக்கு முன்பதிவுகளை மறுக்கும் அமெரிக்க ஹொட்டல்களின் நிலைமையுடன் அவர் இச்சூழ்நிலையை ஒப்பிட்டார். மேலும், வளைகுடா நாடுகளிலுள்ள ஹொட்டல்களும் அதே நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.