தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியீடு!

17 ஆடி 2025 வியாழன் 16:54 | பார்வைகள் : 206
பசங்க திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். அப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மெரினா என்கிற படத்தை இயக்கினார் பாண்டியராஜ். அதன் பின் இதே கூட்டணியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டார் பாண்டிராஜ்.
இவர் இயக்கத்தில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. சூர்யா நாயகனாக நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாண்டிராஜ், முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். தலைவன் தலைவி திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மைனா நந்தினி, நடிகை தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தலைவன் தலைவி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். ஆகாச வீரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கும், பேரரசியாக நடித்துள்ள நித்யா மேனனுக்கும் இடையிலான மோதலும் காதலும் தான் இந்த தலைவன் தலைவி திரைப்படம் என்பது அதன் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் ஆக்சன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இந்த தலைவன் தலைவி இருக்கும் என டிரைலர் உணர்த்துகிறது.