சி.பி.ஐ., விசாரிக்க கோரும் மனு: தள்ளுபடி செய்ய அரசு கோரிக்கை
19 ஆடி 2024 வெள்ளி 03:19 | பார்வைகள் : 908
தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில பொருளாதார குற்றப்பிரிவு கேட்டுள்ளது.
'ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., என, பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
இது தொடர்பான மோசடி வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும்' என, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி நிறுவன மோசடி தொடர்பாக, 2021 முதல் 2024 வரை, மொத்தம் 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, 141.29 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற, நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தலைமறைவானர்களை தேடி வருகிறது.
கடந்த 2021 முதல் 2024 வரை, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் 1,524 வங்கி கணக்குகளில் இருந்த, 180.70 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.
மோசடி நிறுவனங்களுக்கு சொந்தமான 1118.46 கோடி ரூபாய் மதிப்பிலான 3,264 அசையும், அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள 659 வழக்குகளில், 676.6 கோடி ரூபாய் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சி.பி.ஐ., விசாரணை கோரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.