சமச்சீர் கல்வியில் தனியார் புத்தகங்கள்: பள்ளிக்கல்வித்துறை அனுமதி
19 ஆடி 2024 வெள்ளி 03:17 | பார்வைகள் : 803
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வரையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது அமலானது முதல் தமிழ்நாடு பாடநுால் கழகம் அச்சிடும் புத்தகங்களை மட்டுமே, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசின் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி அதே பாடத்திட்டத்தை பின்பற்றும் வகையில் 8ம் வகுப்பு வரை பிற தனியார் வெளியீட்டாளர்கள் தயாரிக்கும் பாட புத்தகங்களையும் பின்பற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் அனுமதி பெற்று உள்ளன.
இதனால் மாணவர்களுக்கான பாடப் புத்தக வினியோகம் மற்றும் கற்பித்தல் முறைகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சில தனியார் பள்ளிகள் அரசின் தமிழ், ஆங்கில பாட புத்தகங்களை மட்டும் வாங்கி விட்டு மற்ற பாடங்களுக்கு பிற வெளியீட்டாளர்களின் புத்தகங்களை பயன்படுத்த துவங்கிஉள்ளன. இதனால் அரசின் பாடப் புத்தகங்களை அச்சடிப்பதிலும், வினியோகம் செய்வதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இந்த குளறுபடிக்கு உரிய தீர்வு காணவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் அரசின் புத்தகங்கள் மட்டுமின்றி தனியார் புத்தகங்களை பயன்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.