இந்தியன் 2 தோல்வி.. ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு!
17 ஆடி 2024 புதன் 13:17 | பார்வைகள் : 1189
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் காம்போவில், பல வருடங்களுக்கு பின்னர் வெளியான திரைப்படம் 'இந்தியன் 2'. 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் தற்போது வரை, அதிகப்படியான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் திரைப்படமாக உள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
கமல்ஹாசன் இரண்டாவது பாகத்திற்காக, முதல் பாகத்திற்கு ஒதுக்கிய கால்ஷீட் விட அதிகமான நாட்களை ஒதுக்கியதோடு பல காட்சிகளில் ரிக்ஸ் எடுத்து நடித்திருந்தார். காரணம் இரண்டாம் பாகத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருந்ததோடு, சண்டை காட்சிகளிலும் மிரட்டி இருந்தார். குறிப்பாக மேக்கப் போடுவதற்கே நான்கு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகுமாம். எனவே பத்து மணிக்கு முதல் சாட் எடுக்கப்படுகிறது என்றால், காலை 5:00 மணிக்கே மேக்கப் ரூமில் கமலஹாசன் இருக்க வேண்டிய சூழல் இருந்ததாக, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இயக்குனர் சங்கர் தெரிவித்திருந்தார்.
அதேபோல் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியன் 2 படத்தில் பேசப்பட்டுள்ளதாகவும், அவை ரசிகர்கள் மனதை கவரும் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் ஏனோ இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மனதில் பெரிதாக எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் பாகத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு இரண்டாம் பாகத்தில் எந்தவித சென்டிமென்ட் மற்றும் ரசிகர்களுடன் கனெக்ட் செய்து கொள்ளமுடியவில்லை என கூறினர்.
'இந்தியன் 2' மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 12ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது வரை 150 கோடியை எட்ட திணறி வருகிறது. மேலும் இப்படத்தின் தோல்விக்கு காரணம் படத்தில் தேவையில்லாத காட்சிகள் இடம் பெற்றதும், இப்படத்தின் நீளமும் என கூறப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை வெட்டி எறிய இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 'இந்தியன் 2' படத்தில் இருந்து சுமார் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக, லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், இந்தியன் 2 படம் தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில்... இந்த 12 நிமிட காட்சிகளை வெட்டிய பின்னர், கதைக்களம் சூடு பிடிக்குமா? பட குழுவின் இந்த முயற்சி இந்த அளவுக்கு இந்தியன் 2 படத்திற்கு கைகொடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.