Paristamil Navigation Paristamil advert login

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?

17 ஆடி 2024 புதன் 03:16 | பார்வைகள் : 1177


நிலப் பிரச்னை தொடர்பாக தன் மகனுடன் மோதியதால், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சிறையில் இருந்தபடி, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ரவுடி நாகேந்திரன் மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், 52, சென்னை பெரம்பூரில், இம்மாதம், 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம், 33, என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து நேற்று, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசாருக்கு, ரவுடி நாகேந்திரன் மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்துள்ளது.


இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:


ஆம்ஸ்ட்ராங் எதிரிகள் குறித்து விசாரித்து வருகிறோம். அப்போது, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது.

ஆம்ஸ்ட்ராங் மொபைல் போன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்தோம். வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டது தெரியவந்து உள்ளது.

ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கட்டுமான நிறுவன அதிபர் ஜெயபிரகாஷ், 30, என்பவரை கடந்தாண்டு, மாமூல் கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளார். அப்போது, ஜெயபிரகாஷுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் செயல்பட்டுள்ளார்.

இது, ரவுடி நாகேந்திரனுக்கு தெரியவந்தது. மகனுடன் மோதும் ஆம்ஸ்ட்ராங்கை மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். இதுபற்றி நாகேந்திரனிடம் விசாரிக்க உள்ளோம்.

அத்துடன், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கூலிப்படையினருக்கு, பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்