நெருங்குது மத்திய பட்ஜெட்: 21ல் அனைத்து கட்சி கூட்டம்
17 ஆடி 2024 புதன் 03:14 | பார்வைகள் : 904
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி துவங்க உள்ள நிலையில், சபையை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க, வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன், பிப்., 1ல் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றபின், நடப்பு, 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதன் வாயிலாக, தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்து விவாதிக்க, வரும் 21ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பார்லி வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முதல்முறையாக பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தை திரிணமுல் காங்., புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1993ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆட்சியின்போது, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி இருந்தார்.
அப்போது நடந்த பேரணியில், 13 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர்களின் நினைவாக, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 21ல் பேரணி சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக அக்கட்சி உறுப்பினர்கள், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.