சர்க்கரை பொங்கல்.....
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10482
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும் பெரிய குதூகலத்தை ஏற்படுத்தும். மேலும் பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
பொங்கலின் மற்றொரு சிறப்பான கரும்பிற்காகவே பொங்கல் பண்டிகைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த பண்டிகையின் போது கரும்பு மிகவும் விலை குறைவில் கிடைக்கும். அத்தகைய சிறப்புடன் இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலை சிலருக்கு சரியான சுவையில் வைக்கத் தெரியாது. அத்தகையவர்களுக்கு அந்த சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சர்க்கரைப் பொங்கலை வைத்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
வெல்லம் - 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் - 150 கிராம்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.
பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!
குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.