Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தாம்பத்திய மகிழ்ச்சி அதிகரிக்க ....

தாம்பத்திய  மகிழ்ச்சி அதிகரிக்க ....

14 ஆடி 2020 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 15474


 கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான முதல் 5 விஷயங்களை பாலியல் நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:

 
1. உடற்பயிற்சி
 
 
தம்பதிகள் இருவருமே திருமணமான தொடக்க காலத்தில் இருந்தே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. உடற்பயிற்சியால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு எப்போதும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த புத்துணர்ச்சிதான் சிறந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அடிப்படை. உடற்பயிற்சியே செய்யாதவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை பெற முடியாது. சைக்கிளிங், நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுவது தாம்பத்ய செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
 
2. படுக்கை அறை
 
மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு படுக்கை அறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. படுக்கை அறை காற்றோட்டமாகவும், மனதுக்கு ரம்மியமளிப்பதாகவும் இருப்பது அவசியம். படுக்கை, அதன் விரிப்புகள் சுத்தமாக இருக்கவேண்டும். அறை சுவர்களில் இளம்நிறத்தி லான பெயிண்ட் ஏற்றது. படுக்கை அறைக்குள் டி.வி.யை பொருத்தாமல் இருப்பது நல்லது. தாம்பத்ய உறவுக்கு முன்பு ஒரு தடவை டி.வி.யில் செய்திகளை பார்க்கலாம் என்று நினைத்து டி.வி.யை ஓடவிட்டால் அதில் வரும் சோக, ஆக்ரோஷ செய்திகள் உங்கள் மனநிலையை கெடுத்துவிடும். அதனால் வீட்டு படுக்கை அறைக்குள் டி.வி. இருந்தால் அதனை அப்புறப்படுத்திவிட பரிந்துரைக்கிறார்கள்.
 
3. செல்போன் பயன்பாடு
 
படுக்கை அறைக்குள் செல்போன்களை பயன்படுத்துவது ஆபத்தாக கருதப்படுகிறது. அந்த ஜோடிகளுக்கு இடையில் இன்னொரு அன்னியனை உள்ளே அனுமதிப்பது போன்று, செல்போன் அவர்கள் உறவுக்கு உலைவைத்துவிடும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் தற்போது பாலியல் நிபுணர்கள் செல்போனையும் தாம்பத்ய ஊக்குவிப்பு கருவியாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
 
நடுத்தர வயது தம்பதிகள் பல்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் அடிக்கடி விரக்தியான நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு தாம்பத்யத்தில் உள்ள ஆர்வம் வெகுவாக குறைந்துவிடுகிறது. அத்தகைய தருணங்களில் தம்பதிகள் படுக்கைஅறைக்கு செல்போனை எடுத்துச்செல்லலாம். கணவர் மனம்விட்டு சிரிக்கக்கூடிய வீடியோக்களை மனைவி தேர்ந்தெடுத்து, அவருக்கு காட்டலாம். கணவரும் அதுபோல் செய்யலாம். இருவரும் மனம் மகிழத்தக்க காட்சிகளை அதில் பார்த்து தங்களிடையே பாலியல் ஆர்வத்தை பெருக்கிக்கொள்ளலாம்.
 
காதல் திருமணம் செய்துகொண்டவர்களாக இருந்தால், காதலித்த நாட்களில் எடுத்திருந்த போட்டோக்களை செல்போனில் பாதுகாத்து வைத்திருப்பீர்கள். அதை பார்த்து ரசிக்கலாம். திருமணமான தொடக்க கால மகிழ்ச்சியான நினைவுகளையும் அதன் மூலம் அசைபோடலாம். நீங்கள் ஜோடியாக இயற்கை எழில் சூழ்ந்த பகுதி எங்காவது பயணித்திருந்தால், அந்த காட்சிகளை பார்த்து மலரும் நினைவுகளுக்குள் பிரவேசிக்கலாம்.
 
கணவன்- மனைவி இடையேயான பாலியல் உறவை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருவருக்குமே இருக்கிறது. வேலை, பணம், பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் பலரும், அத்தியாவசியமான பாலியல் உறவை மேம்படுத்த தவறிவிடுகிறார்கள். அதை மேம்படுத்த செல்போனையும் அளவோடு பயன்படுத்தலாம் என்றே பாலியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
 
4. வாசனை வீசட்டும்
 
லாவெண்டர், வெனிலா, ஜாஸ்மின் போன்றவை ‘ரிலாக்ஸிங் சென்ட்’களாகும். ஆரஞ்ச், லெமன், சிட்ரஸ் போன்றவை எனர்சைசிங் சென்ட்களாகும். இவைகளை படுக்கை அறைக்கு செல்லும்போது பயன்படுத்துவது நல்ல பலனைத்தரும்.
 
5. உற்சாகமான பேச்சு
 
உடல் சுத்தமும், உற்சாகமான பேச்சும் தாம்பத்ய ஆர்வத்தை அதிகரிக்கும். அதில் கணவன் - மனைவி இருவருமே அதிக அக்கறை காட்டவேண்டும். வீட்டுவேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு வியர்வை பூத்த உடலுடனும், சமையல் வாடை வீசும் உடையுடனும் பெண்கள் படுக்கை அறைக்கு வருவதை தவிர்க்கவேண்டும். இன்னொரு முக்கிய விஷயம், ‘ஆண்கள் மது அருந்திவிட்டும், புகைபிடித்த வாயோடும் படுக்கை அறைக்கு வருவதால்தான் தங்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக’ நடுத்தர வயது பெண்கள் குறைபட்டிருக்கிறார்கள், இந்த குறையினை ஆண்கள் நிவர்த்திசெய்வது அவசியமானது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்