இந்தியாவின் தாராள குணம்; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நேபாளம்
30 ஆவணி 2026 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 242
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா மேற்கொண்டு வரும் மனிதாபிமான உதவிகளுக்காக, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 11 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடனேயே, நேபாளத்திற்கு அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் நிவாரணம் மற்றும் மருந்துப் பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதுவரை 57.6 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள் மற்றும் சுரங்க மீட்பு நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் நேபாளம் சென்றுள்ளது.
தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இக்கட்டான சூழலில் நேபாளத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பேரிடரால் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களை மறுசீரமைக்க உதவுவதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளது. பிரதமர் மோடியும், இந்திய அரசும் மிகவும் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு நேபாளம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோதும், இந்திய அரசு இதேபோன்ற உதவிகளை தாராளமாக செய்தது" எனத் தெரிவித்துள்ளார்.



