Paristamil Navigation Paristamil advert login

லண்டனில் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த லஞ்ச புகார்!

லண்டனில் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த லஞ்ச புகார்!

22 ஆடி 2026 புதன் 07:03 | பார்வைகள் : 181


மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, லண்டனில் உள்ள ஆசிரியை மகன் முதல்வர் விஜய்க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய். இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமார் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றார் என புகார் அளித்தார். இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதல்வர் விஜய் அறிவித்த 'லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்' தமிழக அரசின் வாட்ஸ் அப் எண், முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று (நோ அப்ஜெக்ஷன், நோ டியூ சர்ட்டிபிகேட்) பெற பி.இ.ஓ.,வுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்க விடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், ரூ.40 ஆயிரத்தை திரும்ப பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சீனித்தாய் கூறுகையில், ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே பி.இ.ஓ.,வுக்காக என்னிடம் தலைமையாசிரியர் வாசுதேவன் பேசி இத்தொகையை பெற்றார். துபாயில் உள்ள என் மற்றொரு மகன் ரோஹித் தான் ரூ.30 ஆயிரத்தை வாசுதேவனுக்கு அனுப்பினார். நான் ரூ.5 ஆயிரம் பி.இ.ஓ.,விடம் நேரில் கொடுத்தேன். என் புகார் மீது சரிவர விசாரிக்கவில்லை என்றார்.

சம்பந்தப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக் கல்வி  டி.இ.ஓ., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, வாங்கவில்லை என்றார்.

வெளிப்படையான விசாரணை வேண்டும்

இப்பிரச்னை குறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரனும் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய கருத்துரு தயாரித்துக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பலரிடம் இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. டி.இ.ஓ., விசாரணையில் சம்பந்தப்பட்ட பி.இ.ஓ., அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவரின் கருத்து கேட்கப்படவில்லை.

ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., நடைமுறைக்கு வந்த பின்  பி.இ.ஓ., அலுவலக எழுத்தரே பி.இ.ஓ.,வின் 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' மூலம் ஓய்வூதிய கருத்துருவை தயாரிக்க முடியும். இதற்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் 'ஒரு வாரத்திற்குள் நீங்களே கருத்துருவை வெளியே தயாரித்து கொண்டு வாருங்கள்' என கூறுவதால், வேறு வழியின்றி பணம் கொடுக்கும் சூழல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.

அரசு அலுவலகங்களில்  லஞ்சம் கேட்டால் கொடுக்கக் கூடாது என முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஓய்வு ஆசிரியையின் புகார் மீது கல்வித்துறை அதிகாரிகள் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.