பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல், பிரியங்கா கைதாகி விடுதலை
22 ஆடி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 156
தடையை மீறி பிரதமர் மோடி இல்லம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களை டில்லி போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், நேற்று பார்லிமென்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் ஒட்டுமொத்த டில்லியே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதில் பேரணியில் ஈடுபட்டவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அங்கிருந்து பேரணியாக பிரதமர் இல்லம் அமைந்தள்ள லோக் கல்யாண் மார்க் நோக்கி பேரணியாக சென்றனர்.
பிரதமர் இல்லம் முன் அமர்ந்து கொண்ட அவர்கள், மோடி பதவி விலக வேண்டும் என கோஷம் போட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ராகுல் வெளியிட்ட பதிவு: நேற்று மாணவர்கள் மீதான வன்முறையைக்கு நீதி கேட்டு பிரதமர் மோடி இல்லம் நோக்கி பேரணி சென்றோம். பொறுப்பு ஏற்க அரசு விரும்பவில்லை. பார்லிமென்டில் விவாதம் நடத்தவும் விரும்பவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் தெரிவித்தார்.
கல்யாண் மார்க் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
டில்லியில் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய ராகுலுடன், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது பார்லியில் விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண்டால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ராகுல் தெரிவித்திருந்தார். அதை மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஏற்றுக் கொண்ட நிலையில், போராட்டத்தை முடிக்காமல் வேறு கோரிக்கைகளையும் ராகுல் வலியுறுத்த தொடங்கினார். இதனையடுத்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ராகுல், பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பல இடங்களில் காங்கிரசார் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ராகுல், சதர்சல் மைதானத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். பிரியங்கா, காந்தி மந்திர் மார்க் போலீஸ் ஸ்டேசனில் தடுப்பு காவலில் இருந்தார். அங்கு வந்த சோனியா சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு அவரை சந்தித்தார்.
இந்நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு, ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் விடுதலை செய்தனர்.
பிரியங்கா உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நடுவில் நின்ற ராகுல், சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். நீண்ட நேரம் சென்ற பிறகு தரையில் அமர்ந்து, தண்ணீர் குடித்தபடி அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
மாற்றிப் பேசும் ராகுல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
ராகுலுடன் பேச்சு நடத்திய பிறகு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சில மணி நேரங்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர், தங்களது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தது. மூத்த தலைவர்களின் கண்ணியம் கருதி, அவர்களுடன் பேச்சு நடத்த என்னையும், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனையும் அரசு அனுப்பி வைத்தது.
இந்த இடம், போராட்டம் நடத்துவதற்கானது அல்ல. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என ராகுலிடம் விளக்கினோம்.
நீட் தேர்வு விவகாரம் மற்றும் அது சார்ந்த பிரச்னைகளை பார்லிமென்டில் விவாதிக்க ஒப்புக் கொண்டால் உடனடியாக போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ராகுல் உறுதி அளித்தார்.
சிறிது நேரத்தில் அரசின் அனுமதி பெற்று, அவரின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக ராகுலிடம் தெரிவித்தோம். பார்லிமென்டில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் எனக்கூறப்பட்டது.
இதனை கூறிய பிறகு,' இது மட்டும் போதாது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வார் என்ற வாக்குறுதி வேண்டும்' என ராகுல் தெரிவித்தார். மேலும்,' எனக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதில், நீட் விவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதம் வேண்டும் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.
முன்பு ஒரு நிபந்தனை மட்டும் தான் வைத்தீர்கள் எனக் கூறிய போது, அதற்கு ராகுல், 'தற்போது எனது நிபந்தனை மாறிவிட்டது' என்றார். 'உங்களைப் போன்ற மூத்த தலைவர் வாக்குறுதியில் இருந்து பின்வாங்கக்கூடாது' என அவரிடம் விளக்கிய போதும், அதனை ராகுல் ஏற்கவில்லை. மாறாக 'அது தனது உரிமை' என்றார்.
இந்த இடம் போராட்டம் நடத்துவதற்கு உகந்தஇடம் அல்ல என உள்துறைச் செயலர் விளக்க முயன்ற போது, 'விரும்பும் இடத்தில் அமர்வதும் எனது உரிமை தான்' என்பது ராகுலின் பதிலாக இருந்தது.
ராகுலை போன்ற மூத்த தலைவர், எதிர்க்கட்சி தலைவர், தனது வாக்குறுதியை காப்பாற்றத் தவறியது துரதிர்ஷ்டவசமானது. இது ஜனநாயகத்தின் அனைத்து மரபுகளுக்கும் முரண் ஆனதாகும்.
நீட் தேர்வு குறித்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாக பார்லிமென்டில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக விதிமுறைகளின்படி முறையான விவாதத்தை நடத்துவதற்கு எந்த ஒரு அறிவிப்பையும் காங்கிரஸ் அளிக்கவில்லை. ராகுலின் செயல்பாடு ஜனநாயக கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இவ்வாறு அதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire