Paristamil Navigation Paristamil advert login

கணவன் - மனைவி உறவை பலப்படுத்த இடையே இடைவெளி அவசியமா?

 கணவன் - மனைவி உறவை பலப்படுத்த இடையே இடைவெளி அவசியமா?

21 ஆடி 2026 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 138


கல்யாணம் என்றாலே நம் ஊரில் 'நூறு காலத்துப் பயிர்' என்பார்கள். தம்பதிகள் என்றால் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும், எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் நம்மில் பலரது எண்ணம். ஆனால், உண்மையில் இந்த இடைவிடாத நெருக்கமே சில நேரங்களில் தம்பதிகளுக்குள் ஒருவித சலிப்பையும், மூச்சுமுட்டலையும் ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால், கணவன்-மனைவி இடையே இணக்கமான, நீண்ட கால உறவை பேணுவதில் ஜப்பானியர்கள் ஒரு தனித்துவமான வழியை பின்பற்றுகிறார்கள். இதற்காக அவர்கள் பெரிய தியாகங்களோ அல்லது கடினமான சடங்குகளோ செய்வதில்லை. மாறாக, 'மா' (Ma) என்ற எளிய வாழ்வியல் தத்துவத்தை அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக, ஒரு தம்பதி என்றால் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும், எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால், இந்த எண்ண ஓட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை ஜப்பானியர்களின் 'மா' கோட்பாடு நமக்கு கற்றுத்தருகிறது. உறவுக்குள் இருக்கும் 'இடைவெளி' எவ்வாறு அந்த உறவை மேலும் பலப்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அதாவது, கணவன்-மனைவிக்குள் எப்போதுமே ஏதோ ஒரு உரையாடல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில நேரங்களில் இருவருக்குள் நிலவும் மௌனமும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிறிய தனிப்பட்ட இடைவெளியும் கூட அன்பின் வெளிப்பாடுதான்

தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், சில நேரங்களில் ஒரு சிறிய வாதம் தேவையற்ற வார்த்தைகளால் பெரிய சண்டையாக மாறிவிடுகிறது. இது ஒருகட்டத்தில் பிரிவில் கூட கொண்டு போய் முடிந்துவிடும். இங்கே கணவன்-மனைவி இடையே அன்பு இல்லை என்பது பிரச்சனை கிடையாது. சண்டையின் போது கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள்தான் விரிசலை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் பூர்வமாக பார்த்தால், இருவருக்குள் வாதம் ஏற்படும் போது உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. அந்த தருணத்தில் நம் மூளை மற்றவர்கள் சொல்வதை கேட்கும் நிலையில் இருக்காது. தன்னை தற்காத்து கொள்வதற்காக இன்னும் கோபமாக பேச தூண்டும். இதனால் தான் தேவையற்ற வார்த்தைகள் வெளிவருகின்றன.

இந்த இடத்தில் தான் ஜப்பானியர்களின் 'மா' கோட்பாடு உதவுகிறது. சண்டை வரும்போது தம்பதியினர் உடனுக்குடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அமைதியை கடைப்பிடிக்கிறார்கள். ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையோ அல்லது அலைபேசியில் விவாதிப்பதையோ தவிர்த்துவிட்டு தங்களுக்குள் ஒரு தற்காலிக மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள். இது மனதை அமைதிப்படுத்தவும், அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பதை தடுக்கவும் உதவுகிறது.

மௌனம் காக்க வேண்டும் என்று சொன்னதும், இதை ஒருவருக்கொருவர் பேசாமல் பழிவாங்கும் 'மௌன யுத்தமாகவோ' அல்லது அலட்சியமாகவோ எடுத்துக்கொள்ள கூடாது. உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் முற்றிலும் விலகி இருப்பது இதன் நோக்கம் அல்ல. கோபம் மற்றும் ஆத்திரத்தின் அளவு குறையும் வரை இருவருக்குள்ளும் ஒரு தற்காலிக அமைதியை உருவாக்குவதே இதன் பொருள். ஆவேசம் குறைந்த பிறகு, நிதானமாக அமர்ந்து அந்த பிரச்சனை குறித்து பேச வேண்டும்.

உதாரணமாக, ஒருவருக்கு தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கலாம், மற்றொருவருக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில், "நான் செய்வதைத்தான் நீயும் செய்ய வேண்டும்" என்று ஒருவரை ஒருவர் வற்புறுத்த கூடாது. அவரவருக்கு பிடித்தமான செயல்களை செய்ய தாராளமாக அனுமதி கொடுக்க வேண்டும். தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை அனுபவித்த பிறகு, மீண்டும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது, அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்யலாம். இது உறவை சலிப்படையாமல் பார்த்துக்கொள்ளும்.

எவ்வளவு நெருக்கமான பந்தமாக இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருப்பது அவசியம் புரிதல் கூடும்: இந்த இடைவெளி இருக்கும் போதுதான் தம்பதியினருக்குள் தேவையற்ற சந்தேகங்களும், அவநம்பிக்கைகளும் வராமல் இருக்கும்.மதிப்பும் சுதந்திரமும்: ஒருவருக்கொருவர் மதிப்பும், சுதந்திரமும் கொடுக்கும் போதுதான் அந்த உறவு மேலும் அழகாக மாறும்.நேரத்தின் அருமை: தம்பதியினர் ஒன்றாக இருக்கும் நேரத்தை முழு மனதுடன் ரசித்து வாழ இது வழிவகை செய்கிறது.

இருவருக்குமே அவரவர் தனித்தன்மையை இழக்காமல் வளரக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை மட்டுமே பரிமாறிக்கொள்வார்கள். கணவன்-மனைவி அன்பிற்கு எப்போதும் வார்த்தைகள் மட்டுமே தேவையில்லை. சில நேரங்களில் அமைதி, பொறுமை, மற்றும் துணைவருக்குத் தேவையான தனிமையை கொடுப்பதுமே சிறந்த அன்பின் அடையாளம் என்பதை ஜப்பானியர்களின் இந்த 'மா' கோட்பாடு நமக்கு அழகாக உணர்த்துகிறது.