Paristamil Navigation Paristamil advert login

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு - 20 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு - 20 பேர் பலி

21 ஆடி 2026 செவ்வாய் 11:45 | பார்வைகள் : 155


கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காணாமற்போனதாகவும் காணாமற்போனவர்களில் பருன் நகர மேயரும் ஒருவர் எனவும் அந்நாட்டின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பருன் நகரம் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

"கடுமையான நிதியிழப்பும் மனித உயிரிழப்புகளும்" ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தினால் பல வீடுகள், கடைகள் மற்றும் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த அழிவுகளை எடுத்துக்காட்டும் காணொளிகளும் தற்போது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

புயல் மற்றும் வறட்சி உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. அமெரிக்கத் தலைமையிலான படைகளின் வெளியேற்றம் மற்றும் 2021-இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் முடிந்த பல தசாப்த காலப்போரினால் பேரழிவுக்குள்ளான உலகின் மிகவும் ஏழை நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

சமீபத்திய வெள்ளப்பெருக்கு பருன் நகரத்தின் "நகராட்சி கட்டடத்தை முற்றிலும் அழித்துவிட்டது" என்று 'ஷ்புல்' என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆஷிகுல்லா சஃபி (Ashiqullah Safi) தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக நகரத்தைச் சுற்றிப் பெரிய பாறைகள் சிதறிக் கிடப்பதாகவும், உரிய உபகரணங்கள் இன்றிச் சிதைவுகளுக்கு இடையே பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் 34 மாகாணங்களில் 10 மாகாணங்களில் நாளை  புதன்கிழமை (22) வரை கனமழையும் வெள்ளப்பெருக்கும் தொடரும் எனத் தலிபான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நூரிஸ்தான் மாகாணம் அதன் பசுமையான மலைச்சிகரங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் தெளிவான நதிகளுக்குப் பெயர் பெற்றது. 

இது 2020ஆம் ஆண்டில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நூரிஸ்தான் மற்றும் பிற மாகாணங்களில் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவது, அதிக மழையை உறிஞ்சும் நிலத்தின் திறனைக் குறைப்பதன் மூலம் திடீர் வெள்ளப்பெருக்கை மேலும் மோசமாக்கியுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், வடக்கு ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 150 பேர் உயிரிழந்தனர். ஆனால், உலக உணவுத் திட்டம் (WFP) உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300க்கும் அதிகம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.