Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்டு!

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்டு!

21 ஆடி 2026 செவ்வாய் 11:11 | பார்வைகள் : 169


தமிழகத்தில் ரூ.3,250 கோடி முதலீடு செய்து மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்டு கார் நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர், சென்னையில் முதல்வர் விஜயை சந்தித்து பேசினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்  உள்ள மறைமலைநகரில் போர்டு கார் நிறுவனத்தின் வளாகம் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்த வளாகத்தை மீண்டும் செயல்படுத்தவும், உற்பத்தியை தொடங்கவும் அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. ரூ.3250 கோடி முதலீட்டில் இன்ஜின் உற்பத்தி மையத்தை இங்கு துவங்கும் நிறுவனத்தின் திட்டத்தால் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயுடன் போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்து பேசினர். மீண்டும் போர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்தும், வரும் காலங்களில் உற்பத்தித்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள விரிவாக்கத் திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, போர்டு நிறுவனம் விரைவில் துவங்க இருக்கும் உற்பத்தி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார். உற்பத்தி தொழிற்சாலையை முழு அளவிற்கு பயன்படுத்தும் விதமாக, மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.