Paristamil Navigation Paristamil advert login

சிஜேபி இயக்கத்தினர் முன்வைத்த 3 கோரிக்கை: போராட்டத்தை கைவிட நட்டா வலியுறுத்தல்

சிஜேபி இயக்கத்தினர் முன்வைத்த 3 கோரிக்கை: போராட்டத்தை கைவிட நட்டா வலியுறுத்தல்

21 ஆடி 2026 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 261


டில்லியில்  போராட்டம் நடத்தி வரும் சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி இயக்கத்தினர் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என  அவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக டில்லியில் போராட்டம் நடத்தி வரும் சிஜேபி இயக்கத்தினர், இன்று பார்லிமென்ட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க போலீசார் முயற்சி செய்தனர்.

இந்நிலையில், போராட்டக்குழுவினர்  மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து மனு அளித்தனர். அதனையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

1. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடனடி விடுவிப்பு
2. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா.
3. நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றை முக்கியமாக வைத்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு இணையதள குழப்பம் மற்றும் கியூட் தேர்வு தேர்வு தாமதம் உள்ளிட்ட தேர்வு குளறுபடிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சரே நேரடியாகப் பொறுப்பு. கல்வி அமைச்சராக பிரதான் எந்தவொரு முறையான திருத்தங்களோ நடவடிக்கையோ எடுக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் எடுத்துள்ள அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்எனவும் தெரிவித்துள்ளனர்.  

இதன் பிறகு, சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நானும், அசுதோஷ் ரங்காவும் நட்டாவை 10 நிமிடம் சந்தித்து பேசினோம்.  கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக அளித்தோம். இது குறித்து கட்சியினருடன் பேசுவதாக  நட்டா தெரிவித்தார். முடிவுக்காக காத்திருக்கிறோம்.  இது குறித்து  ஆலோசித்து சொல்வதாக நட்டா உறுதி அளித்து உள்ளார். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நட்டா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:  ஜூலை 20 காலை முதன்முறையாக போராட்டக்காரர்களிடம் இருந்து அரசுடன் பேச்சு நடத்துவதற்கான முன்மொழிவு வந்தது. காலை 11:50 மணி முதல் பேச்சு நடந்தது. சுமூகமான சூழலில் இப்பேச்சு இருந்தது.  வாய்மொழியாக பேச்சு நடந்த நிலையில், மாலை 4 மணியளவில் எழுத்துப்பூர்வமான மனுவை அளித்தனர்.  போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் நட்டா கூறியுள்ளார்