தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா; அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
20 ஆடி 2026 திங்கள் 11:17 | பார்வைகள் : 289
அனைத்து கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு இன்னும் தெளிவான மசோதாவை தரவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதில் இருந்து அக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் எனக் கூறப்பட்டது. அக்கட்சி ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் குழுவை அழைத்ததை கண்டித்து திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் இக்கூட்டத்திற்கு பிறகு சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமசந்திரன் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: துரதிர்ஷ்டவசமாக தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.
ஆனால், திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. தென் மாநிலங்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. தற்போது இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து அரசின் நிலைப்பாடு இன்னும் விளக்கம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டில்லி வட்டாரங்கள் கூறுகையில், '' தொகுதி மறுவரையறை மசோதா வாயிலாக, ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா வாய்மொழியாக கூறியதை, மசோதாவில் குறிப்பிட வேண்டும் என திமுக விரும்புகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் ஆதரவு குறித்து பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற, லோக்சபாவில் தேவையான 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காத காரணத்தினால் இம்மசோதா தோல்வி அடைந்தது. இந்த மசோதா இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகின.
ஆனால், லோக்சபா நிகழ்ச்சி நிரலில் இம்மசோதா இடம்பெறவில்லை. இம்மசோதா நிறைவேற லோக்சபாவில் 360 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால், ஆளும் கூட்டணிக்கு 319 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். திமுகவுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். இம்மசோதா மீதான விவாதத்தில் திமுக ஆதரவு தெரிவித்தால் அல்லது வெளிநடப்பு செய்தால், ஆளும் கூட்டணிக்கு இது முக்கியமானதாக இருக்கும்.
*நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக உயர்த்துவது
*இட ஒதுக்கீட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த முடக்கத்தை நீக்குவதுடன், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் அடிப்படையில் புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் வாயிலாக தொகுதி எல்லைகளை மீண்டும் வரைய செய்ய முடியும்
* பார்லிமென்டில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு (33%) இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இம்மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire