சோனம் வாங்சுக் விவகாரத்தில் அரசுக்கு முழு உரிமை உண்டு; டில்லி ஐகோர்ட் கருத்து
20 ஆடி 2026 திங்கள் 10:12 | பார்வைகள் : 261
டில்லியில் 21 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் அனுமதிக்க அரசுக்கு முழு உரிமை இருப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவரை, டில்லி போலீசார் நேற்று டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதனிடையே, வாங்சுக் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, அவரது மனைவி கீதாஞ்சலி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவும் ஆஜராகினர்.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், 'சப்தர்ஜங் மருத்துவமனையில் வாங்சுக்கிற்கு அவரது சொந்த மருத்துவர்களையோ அல்லது வழக்கறிஞர்களையோ சந்திக்கும் வசதி இல்லை. அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும்,' என வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் சேத்தன் சர்மா வாதிட்டதாவது; ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்பட்ட டிவிஷன் பெஞ்ச் உத்தரவின்படி, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை அரசு மருத்துவர்களால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்த வழக்கமான மருத்துவ அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
வாங்சுக் சிகிச்சையை மறுத்தாலும், தேவைப்பட்டால் மருத்துவர்கள் நியாயமான மருத்துவத் தலையீடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனையும் போல வாங்சுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். ஜனாதிபதிக்கே எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாங்சுக் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவியும், சகோதரரும் அவரைச் சந்திக்க 24 மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்குவதற்கு தனி அறையும் தரப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட டில்லி உயர்நீதிமன்றம், சோனம் வாங்சுக் காவலில் வைக்கப்படவில்லை. அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், அவர் தாமாக முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வராததால், அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்க அரசுக்கு முழு உரிமை உண்டு. தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு, உடனடியாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
இது தொடர்பாக அரசு, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும், 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்படுகிறது, இவ்வாறு கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire