Paristamil Navigation Paristamil advert login

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களில் முறைகேடு? ஆய்வு செய்ய குழு அமைப்பு

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களில் முறைகேடு? ஆய்வு செய்ய குழு அமைப்பு

20 ஆடி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 292


திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களில் முறைகேடு நடந்திருக்கிறதா' என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, பொதுப்பணி துறையில் குழு அமைக்கப் பட்டு உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான, தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டு வர முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுப்பணி துறையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி, அந்தத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

திமுக ஆட்சியில், பொதுப்பணி துறை சார்பாக, 6,300க்கும் மேற்பட்ட பணிகள் நடந்துள்ளன. இந்தப் பணிகளை, 2,400க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் செய்துள்ளன.

குறிப்பாக, நாமக்கல், ஈரோடு என, கொங்கு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களே, அதிகப்படியான பணிகளை செய்துள்ளன. அவற்றில், பல பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க, துறையின் மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, 50 கோடி ரூபாய்க்கு குறைவான திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணிகளின் உறுதித்தன்மையை சோதனை செய்ய, துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் உள்ள அதிகாரிகள், கட்டடம் கட்டப்பட்ட போது, விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டனவா, தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா போன்றவற்றில் இருந்து ஆய்வை தொடங்கும்.இடத்தின் மண்ணையும் பரிசோதனை செய்யும். அடுத்து, கட்டடத்தின் உறுதித் தன்மைக்காக பயன்படுத்தப்பட்ட டி.எம்.டி., கம்பிகள், சிமென்ட் கலவையின் விகிதம் உள்ளிட்டவை, 'டெண்டரில்' குறிப்பிடப்பட்டது போல் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

அதேபோல, 50 கோடி ரூபாய்க்கு மேலான திட்ட மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய, சென்னை ஐ.ஐ.டி., நிறுவன நிபுணர் குழு, விரைவில் நியமிக்கப்பட உள்ளது. இந்த இரு குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் திறக்கப்பட்ட, கொளத்துார் அரசு மருத்துவமனை, விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகங்கள், சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதி,நாமக்கல் சட்டக்கல்லுாரி, மதுரை ஏறு தழுவுதல் மைதானம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனை உட்பட, 100க்கும் அதிகமான கட்டடங்களை, முதற்கட்டமாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நிதி வசூலிக்கப்படும். அத்துடன், அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்ப்பதோடு, சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வழக்கும் பதிவு செய்யப்படும். அதேபோல, உறுதித் தன்மை சான்றிதழ் வழங்கியவர் உட்பட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.