Paristamil Navigation Paristamil advert login

செம்மணி புதைகுழியில் கால்களை மடித்து அமர்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு

செம்மணி புதைகுழியில் கால்களை மடித்து அமர்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு

19 ஆடி 2026 ஞாயிறு 17:58 | பார்வைகள் : 419


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 37ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் காணப்பட்ட மேலும் ஒரு எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் 56 நாட்கள் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 37ஆவது நாளில், மொத்தம் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் சிசுவொன்றின் எலும்புக்கூடு உட்பட ஆறு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழாய்வில் வித்தியாசமான அமைப்பில் காணப்பட்ட ஒரு மண்டையோட்டுப் பகுதியை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று தொடரப்பட்ட நிலையில், அது கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூட்டை முழுமையாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் நாளை (20) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் திகதி செம்மணி புதைகுழியில் இருந்து கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் காணப்பட்ட ஒரு எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், அதேபோன்ற அமைப்பில் அடையாளம் காணப்படும் இரண்டாவது எலும்புக்கூடு இதுவாகும்.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட ஒரு பெரியவரின் எலும்புக்கூட்டுக்கு அருகில் காணப்பட்ட சிறியவரின் எலும்புக்கூட்டையும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அவற்றையும் நாளை அகழ்ந்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மொத்தம் 91 நாட்கள் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 446 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 434 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.