Paristamil Navigation Paristamil advert login

விடுமுறை காலத்தில் சுங்கக் கட்டண மோசடி குறித்த எச்சரிக்கை!!

விடுமுறை காலத்தில் சுங்கக் கட்டண மோசடி குறித்த எச்சரிக்கை!!

19 ஆடி 2026 ஞாயிறு 15:30 | பார்வைகள் : 897


தடையற்ற (péage sans barrière) சுங்க நெடுஞ்சாலைகள் அறிமுகமானதையடுத்து, புதிய வகை மோசடி அதிகரித்து வருகிறது. மோசடியாளர்கள், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி போலியான SMS-களை அனுப்பி, வாகன ஓட்டிகளை ஏமாற்ற முயல்கின்றனர்.

இந்த முறையில், வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்க வேண்டியதில்லை. சாலையின் மேல் அமைக்கப்பட்டுள்ள கேமரா பொருத்தப்பட்ட வாயில்கள் (portiques) வாகனங்களின் பதிவு எண்களை தானாகவே பதிவு செய்கின்றன. பின்னர், ஓட்டுநர்கள் 72 மணி நேரத்திற்குள் சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், 10 யூரோ, பின்னர் 90 யூரோ, மேலும் இரண்டு மாதங்கள் கடந்தால் 375 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த SMS-களில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், அது சுங்க நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல தோற்றமளிக்கும் போலி தளத்திற்குக் கொண்டு செல்கிறது. அங்கு சிறிய தொகையைச் செலுத்துமாறு கூறி, வங்கி அட்டை விவரங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

நம்பகத்தன்மையை அதிகரிக்க, அவர்கள் சில நேரங்களில் நோர்மண்டியில் உள்ள A13 மற்றும் A14, Allier மற்றும் Saône-et-Loire இடையேயான A79, மற்றும் Moselle பகுதியில் உள்ள Boulay-யின் A4 போன்ற தடையற்ற நெடுஞ்சாலைகளின் பெயர்களையும் குறிப்பிடுகின்றனர்.

சுங்க நிறுவனங்கள், குறிப்பாக Sanef, தாங்கள் ஒருபோதும் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் பணம் கேட்கமாட்டோம் என்று எச்சரித்துள்ளன. எனவே, சுங்கக் கட்டணத்தைச் சரிபார்க்க வேண்டுமெனில், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வாடிக்கையாளர் கணக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான SMS அல்லது மின்னஞ்சல் வந்தால், அதிலுள்ள இணைப்பைத் திறக்காமல், அந்தச் செய்தியை 33 700 என்ற இலவச சேவைக்கு அனுப்பி புகாரளித்துவிட்டு, பின்னர் அதை நீக்குவது பாதுகாப்பான நடைமுறையாகும்.