Paristamil Navigation Paristamil advert login

சுரேஷ் சலே வழக்கு மீதான இடையீட்டு மனுக்களின் விசாரணை திகதி நிர்ணயம்

சுரேஷ் சலே வழக்கு மீதான இடையீட்டு மனுக்களின் விசாரணை திகதி நிர்ணயம்

17 ஆடி 2026 வெள்ளி 18:03 | பார்வைகள் : 128


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதற்கும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் சவால் விடுத்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை விசாரணை செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய எதிர்வரும் ஒகஸ்ட் 4ஆம் திகதி குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இவ்வழக்கில் பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 8 தரப்பினர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் இன்று (17) அழைக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே இந்த இடையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய, இடையீட்டு மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், தொடர்புடைய மனுக்களை எதிர்வரும் ஒகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பரிசீலனைக்காக அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.