Paristamil Navigation Paristamil advert login

வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை - சிக்கலில் அர்ஜென்டினா வீரர்கள்

வெற்றி கொண்டாட்டத்தில் பாக்லண்ட் தீவு பதாகை - சிக்கலில் அர்ஜென்டினா வீரர்கள்

17 ஆடி 2026 வெள்ளி 14:17 | பார்வைகள் : 128


இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஃபாக்லண்ட் தீவு பதாகையை ஏந்தியது அர்ஜென்டினா வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.

இதில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்திய பின்னர், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தின் போது பயன்படுத்திய பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்ட பதாகையை வைத்து வெற்றியை கொண்டாடினர். இதற்கு, "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பொருள் ஆகும்.

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்த தீவுகளுக்காக, 1982 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் பிரித்தானியா இடையே நடைபெற்ற சுமார் 2 மாத கால போரில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த 655 வீரர்களும், பிரித்தானியாவை சேர்ந்த 255 வீரர்களும், அந்த தீவுகளைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர். இறுதியில், அர்ஜென்டினா சரணடைந்தது.

அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அர்ஜென்டினா துணை ஜனாதிபதி விக்டோரியா வில்லாரூயல், "ஃபாக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை, அவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர அவர்கள் தடை விதித்தார்கள்.  

ஆனால் நாம் அவற்றை நமது ரத்தத்திலும் இதயத்திலும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள்" என பதிவிட்டுள்ளார்.

மேலும், அர்ஜென்டினா ராணுவ வீரர்கள் உள்ள வீடியோவை பகிர்ந்து, இது மற்றுமொரு சாதாரண போட்டி இல்லை என பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டிக்கு முன்னதாக "நாளை நாம் அபகரிக்கும் கொள்ளையர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். இது மற்றுமொரு சாதாரணப் போட்டி அல்ல" என பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு மைதானத்தில் அரசியலை கலப்பது விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதால், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் வர்த்தகம் மற்றும் வணிகத்துறை செயலாளர் பீட்டர் கைல் பிபாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கால்பந்து மைதானங்களுக்குள் அரசியல், மதம் அல்லது தனிப்பட்ட முழக்கங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவதற்கு பிபா தடை விதித்துள்ளது. இதனை மீறும் அணி அல்லது வீரர்களுக்கு அபராதம் அல்லது விளையாட தடை போன்ற கடும் நடவடிக்கைகளை பிபா மேற்கொண்டுள்ளது.

முன்னதாக 2014 ஆம் ஆண்டிலும், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பாக அர்ஜென்டினா வீரர்கள் இதே போன்ற பேனரை ஏந்தியதற்காக, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு பிபா 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்திருந்தது.

இந்நிலையில், அர்ஜென்டினா வீரர்கள் இந்த செயல் குறித்து பிபா விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, நடுவர்கள் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது.

argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என்ற கையெழுத்து பிரச்சாரத்தில், தற்போது வரை 1.41 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.