Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை

இலங்கையில் மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை

23 வைகாசி 2026 சனி 19:49 | பார்வைகள் : 268


அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை கடந்த 15ஆம் திகதி அமைச்சகம் வெளியிட்டு, அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது அரச நிறுவனங்களின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2023.07.19 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அரச நிறுவனங்களுக்குள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதோடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கமைய, ஏற்கனவே அமுலில் உள்ள விதிமுறைகளின்படி, 2023 ஒக்டோபர் 01 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகள், தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கத்திகள், பூமாலைகள் மற்றும் இடியாப்பத் தட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல், சமூக, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் அலங்காரங்களுக்காக அனைத்து வகையான பொலித்தீன் மற்றும் பொலிப்ரோப்பிலீன் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை முறையற்ற விதத்தில் அகற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், விலங்குகள் அவற்றை உட்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்வதால் பாரதூரமான சுகாதாரப் பாதிப்புகள் உருவாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் இவற்றை எரிப்பதால் வெளியேறும் நச்சு வாயுக்களும் மனிதர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்கள் மற்றும் தன்சல்களின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.