Paristamil Navigation Paristamil advert login

ரூ.2.50 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது? மின் வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர் கேள்வி

ரூ.2.50 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது? மின் வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர் கேள்வி

23 வைகாசி 2026 சனி 07:15 | பார்வைகள் : 133


மின் வாரியத்திற்கு, 2.50 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது; இதற்கான காரணம் என்ன' என, அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் துளைத்தெடுத்து வருகிறார். 'நிர்வாகத்தில் இனி அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய், வாரியத்திற்கு கிடைக்கிறது. அதை விட செலவு அதிகம் இருப்பதால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.

இதற்கு, அதிக விலைக்கு மின் சாதனங்கள் கொள்முதல், மின்சாரம் கொள்முதல் செய்வதே முக்கிய காரணம். மின் கொள்முதலுக்கு மட்டும் ஆண்டுக்கு சராசரியாக, 50,000 கோடி ரூபாய்க்கு செலவு செய்யப்படுகிறது.

மின் வாரியத்திடம் நிதி இல்லாததால், புதிய மின் திட்டங்கள், மூலதன செலவுகளுக்கு மத்திய அரசின் பவர் பைனான்ஸ், ஆர்.இ.சி., தமிழக அரசின் பவர் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கப்படுகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல்குமார், மின் வாரிய செயல்பாடு தொடர்பாக, சென்னை தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அதில் தற்போதைய நிலவரப்படி, மின் வாரியம், 2.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள விபரத்தை, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கோடி ரூபாய்க்கு கடன் எப்படி வந்தது; அதற்கான காரணம் என்ன என, அதிகாரிகளிடம் கேட்டு, அமைச்சர் நிர்மல்குமார் துளைத்தெடுத்துள்ளார். 'நிர்வாகத்தில் இனி அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு தொகை கடன் வாங்கப்பட்டுள்ளது; அதற்கான வட்டி எவ்வளவு என்ற விபரங்களை கேட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்ட வட்டி செலவு விபரங்களை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின் சாதனங்களில் ஒவ்வொரு பொருளின் சந்தை விலை; அவை எந்த விலைக்கு வாங்கப்பட்டன; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்ற விபரங்களையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடனை குறைப்பதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

புதிய மின் நிலையம் உள்ளிட்ட மின் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படாததால், அவற்றுக்கு வாங்கிய கடனுக்கான வட்டி உயர்வே கடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என, வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.