Paristamil Navigation Paristamil advert login

காத்திருப்பில் காதல் வளர்க்கின்றேன்

காத்திருப்பில் காதல் வளர்க்கின்றேன்

21 வைகாசி 2026 வியாழன் 16:01 | பார்வைகள் : 117


அவள் கூந்தல் இடுப்பு அளவு 
இருக்கக்கூடும் 
எனக்கும் அவளுக்கும் இருக்கும் 
ஒரு அடி  இடைவெளியை 
காற்றுவாக்கில் கலைத்து
என் முகம் வருடி
கதைத்து செல்கிறது

மல்லிகைக்கு வாசமுண்டு 
அறிவேன் நான் 
ஆனால் இவள் சூடும் பூக்களுக்கு 
வாசத்துடன் சேர்ந்து வார்த்தைகளும் 
உண்டென்று அறிந்ததில்லை 
மல்லி மொட்டுக்கள் 
என் மார்பில் முத்தமிட்டு 
மனதில் கவி பாடின

அவளை பற்றி 
அளவாகவே பேசுவாள் 
இருந்தாலும் பல ஜன்ம பரிச்சயம் 
போன்ற உணர்வை 
பரிசளித்து போவாள்

அவள் சிரிக்கையில் அவளின் 
கை வளையல்கள் சற்றே சிணுங்கும் 
அவ்வளவுதான் 
அமைதியான சிரிப்பு அவளுடையது 
இருவர் மட்டுமே அறிந்த ரகசியமாய்

பெண்கள் காதல் கொள்ளும் போது
வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமாம் 
எந்த அளவு உண்மையென்று 
அவளிடம் கேட்க தயங்கினேன் 
ஆனால் அவளுடன் அளவளாவும் போது
அதை என்னுள் உணர்கிறேன்  
கண்டுகொண்டேன் காதலை

அறிந்தோ அறியாமலோ 
தயக்கத்துடனே 
அவள் பட்டு கைகள் 
என்னை தொட்டு செல்கின்றன 
எனக்காக இசைந்த 
தென்றலின் தாலாட்டு போல்

எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் 
புத்தகங்களை தேடி கண்டுபிடித்து 
பரிசளிப்பாள்  - பலநேரம் 
தானும் படிப்பாள் 
புத்தகத்துடன்  சேர்த்து என் மனதையும்

ஆனால்
கம்பனையும் கீட்ஸையும் 
ஒரே மூச்சில் பேசுபவளுக்கு 
தன் காதலை சொல்ல மட்டும்
தயக்கம் என்னவோ?
அவளே அறிவாள்
நானோ காத்திருப்பில் 
காதல் வளர்க்கின்றேன்