Paristamil Navigation Paristamil advert login

குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்; கவர்னரிடம் இபிஎஸ் தரப்பு புகார்

குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்; கவர்னரிடம் இபிஎஸ் தரப்பு புகார்

15 வைகாசி 2026 வெள்ளி 08:40 | பார்வைகள் : 133


தமிழக முதல்வர் விஜய், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, கவர்னர் மாளிகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் தரப்பில்,புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் 47 எம்.எல்.ஏ.,க்களில் 25 பேர், த.வெ.க., அரசுக்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும், சட்டசபையில் ஓட்டளித்த நிலையில், கட்சி பிளவுபட்டுள்ளது. மேலும், 25 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், தங்கள் தரப்பை அங்கீகரிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தரப்பு, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

அதேபோல் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் என்ற முறையில், இபிஎஸ் முடிவின்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என, இபிஎஸ் தரப்பில், சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், உதயகுமார் உள்ளிட்டோர், கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கேரளத்தில் இருப்பதால், அவரது செயலர் கிர்லோஷ் குமாரிடம் மனு அளித்தனர்.

அதில், தமிழக முதல்வர் விஜய், குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அ.தி.மு.க.,வை இரண்டாக உடைத்து, ஒரு தரப்பினரை அவர் நேரில் சந்தித்ததாகவும், புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுபட்டபோது, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்ஐ சட்டசபை கட்சித் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றும், மனுவில் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, ''பொதுச்செயலர் உத்தரவுக்கு எதிராக, ஒரு தரப்பினர் செயல்பட்டது குறித்து, கவர்னர் மற்றும் சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.