Paristamil Navigation Paristamil advert login

தமிழர்களின் வீரத்தை சொல்லும் "இரண்டாம் உலகப்போர்".

தமிழர்களின் வீரத்தை சொல்லும் "இரண்டாம் உலகப்போர்".

11 ஆனி 2026 வியாழன் 15:39 | பார்வைகள் : 204


"யாத்திசை" படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் "இரண்டாம் உலகப்போர்". சசிகுமார், சமுத்திரக்கனி, பவானிஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜேகே பிலிம் இண்டர்நேர்ஷனல் தயாரிக்கிறது. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் தரணி ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: 1942-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் தீவிரமாக இறுதிக்கட்டத்தில் இருந்தது. ஜப்பான்காரர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் முதலியவற்றைப் பிடித்து விட்டார்கள். அதற்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவைப் பிடிக்க வேண்டும். அதற்காக இம்பால், மணிப்பூர், கோஹிமா, நாகாலாந்து மலைத்தொடர்களின் வழியாக ஏறி இறங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

அப்படி நடந்துவிடாமல் இருக்க, ஒரு பெரும் போருக்கு பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் கதை நடக்கிறது. போர் நடக்கும்போது நிறைய இந்திய வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த நேரத்தில், சுதந்திரப் போராட்டமும் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவை அந்தப் போரில் பங்கேற்கச் செய்ய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், காந்தியோடு "கிரிப்ஸ் மிஷன்" மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜப்பானை ஊக்குவித்தால் அது பாசிசம் ஆகிவிடும் என்பதற்காக, பிரிட்டிஷ் ஆர்மியில் இருக்கிற இந்தியர்கள் சண்டைக்குப் போகிறார்கள். அவர்களில் கணிசமானவர்கள் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவர்கள். அப்படிப் போகிற ஒருவர்தான் கதையின் மையக் கதாபாத்திரம்.

இரண்டாம் உலகப் போரின் உண்மைச் சம்பவங்களை முன்வைத்து வருடத்துக்கு ஒரு ஆங்கிலப் படமாவது வருகிறது. நமக்கும் போரில் பெரும் பங்கு இருக்கிறது. இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் தியாகமும் சேவையும் இதில் அடக்கம். இங்கிருந்து தமிழர்கள் பிரிட்டன், போலந்து நாட்டுக்கெல்லாம் போய் சண்டை போட்டிருக்கிறார்கள். இந்தக் கதைகள் வெளியே வரவே இல்லை. இது இஸ்ரேல் செய்வது மாதிரி விமானத்தில் வந்து குண்டு போடுகிற சண்டை இல்லை. காட்டுத்தீ மாதிரி ஆக்கிரமித்துக் கொண்டே காலாட்படைகள் செல்ல வேண்டும். முதல் வரிசையில் நின்று எதிர்க்க வேண்டும். பெரும் மனித உயிர்களின் அழிவு கொண்டது.

அதிகாரத்தில் இருக்கிறவர்கள் சண்டை போட மாட்டார்கள். சிப்பாயோ, சாதாரண மக்களோதான் இடையில் இருந்து அல்லல்பட வேண்டும். ஆயிரம் பேர் இறந்தால் அடுத்த ஆயிரம் பேர் உடனே அந்த இடத்தை நிரப்ப வேண்டும். இப்படியான அலைக் கழிப்பில் மக்கள் போரால் வாடி அழிந்திருக்கிறார்கள். இதையெல்லாம் காட்சிப் படுத்தி இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் படமாக இருக்கும். என்கிறார்.