Paristamil Navigation Paristamil advert login

ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

ஓமான் வளைகுடாவில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

11 ஆனி 2026 வியாழன் 11:01 | பார்வைகள் : 154


ஓமான் வளைகுடா பகுதியில், ஈரானில் இருந்து மசகு எண்ணெயைக் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் பலாவ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 'செட்டபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலின் போது கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சில கப்பல்கள் மீது ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் ஓமான் நாட்டின் கடற்பரப்புக்கு அருகே புதன்கிழமை பயணித்துக் கொண்டிருந்த குறித்த கப்பலில் வேதிப்பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த மாலுமிகள் அவசர உதவி கோரியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓமான் கடற்படையினர் விரைந்து சென்று 21 இந்திய மாலுமிகளை மீட்டுள்ளனர்.

எனினும், தாக்குதலின் போது கடலில் விழுந்ததாகக் கூறப்படும் 3 இந்திய மாலுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்காவுக்கான இந்திய தூதரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.