Paristamil Navigation Paristamil advert login

மம்தா - சோனியா சந்திப்பு; காங்கிரசுடன் திரிணமுல் காங்., கட்சி இணைகிறதா?

மம்தா - சோனியா சந்திப்பு; காங்கிரசுடன் திரிணமுல் காங்., கட்சி இணைகிறதா?

11 ஆனி 2026 வியாழன் 09:17 | பார்வைகள் : 177


மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், மம்தா பானர்ஜியின் சமீபத்திய டில்லி பயணம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக அகில இந்திய காங்கிரசுடன், திரிணமுல் காங்., கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அதே சமயம், 'தாய் கட்சியான காங்கிரசுடன் இணைய வாய்ப்பு இல்லை' என அதிருப்தி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ரிதபிரதா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அலையில் 15 ஆண்டு கால ஆட்சியை திரிணமுல் காங்., கட்சி பறிகொடுத்தது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி மீதான கட்சித் தலைவர்களின் அதிருப்தி, பொதுமக்களின் ஆத்திரம் இந்த தேர்தலில் பெருமளவு எதிரொலித்தது.

தேர்தல் தோல்விக்கு பின், கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது. 100க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்., கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தனர். மம்தாவின் விருப்பத்துக்கு மாறாக கிளர்ச்சியில் ஈடுபட்ட அதிருப்தி எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக்க 60 எம்.எல்.ஏ.,க்கள் அணி திரண்டனர்.

மறுபுறம் லோக்சபாவில், திரிணமுல் காங்., கொறடாவாக இருந்த ககோலி கோஷ் தஸ்திதாரும், மொத்தம் உள்ள 28 எம்.பி.,க்களில் 20 எம்.பி.,க்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

பார்லி.,யில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால், கட்சிக்குள் செல்வாக்கை இழந்துள்ள மம்தா பானர்ஜி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்., கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். 'இண்டி' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் டில்லி சென்றார்.

வழக்கமாக 'இண்டி' கூட்டணி கூட்டங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் மம்தா, இம்முறை அதில் வலிய சென்று பங்கேற்றார். இந்நிலையில், டில்லியிலேயே மம்தா முகாமிட்டு இருந்தது பல்வேறு யூகங் களுக்கு வித்திட்டுள்ளது.

கடந்த 1997ல் காங்., கட்சியில் இருந்து பிரிந்து தனியாக திரிணமுல் காங்., கட்சியை உருவாக்கிய மம்தா பானர்ஜி, தன் அரசியல் வாழ்க்கைக்காகவும், உறவினரான அபிஷேக் பானர்ஜியின் எதிர்காலத்துக்காகவும், கட்சியை மீண்டும் தாய் கட்சியுடன் இணைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் காங்., கட்சியுடன் இணைந்தால், தேசிய அளவில் மம்தாவுக்கும், அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் பொறுப்புகள் கிடைக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே, டில்லியில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவை தனியே சந்தித்து அவர் நீண்ட நேரம் பேசினார். மேலும், அபிஷேக் பானர்ஜியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை தனியே சந்தித்து விரிவாக விவாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.,வான ரிதபிரதா பானர்ஜி, தாய் கட்சியுடன் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.,க்களில் தற்போது எங்கள் பக்கம் 64 எம்.எல்.ஏ.,க்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில் உண்மையான திரிணமுல் காங்., நாங்கள் தான். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் காங்., கட்சியுடன் இணைவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். லோக்சபா எம்.பி.,க்கள் 20 பேரும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது இணைப்பு எப்படி சாத்தியமாகும்? இவ்வாறு அவர் கூறினார்.