Paristamil Navigation Paristamil advert login

துாத்துக்குடி கப்பல் கட்டும் தளம் மசகான் டாக் வெளியேறுகிறதா?

துாத்துக்குடி கப்பல் கட்டும் தளம் மசகான் டாக் வெளியேறுகிறதா?

10 ஆனி 2026 புதன் 10:08 | பார்வைகள் : 161


துாத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்த நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்', தனது முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், துாத்துக்குடியில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன் மசகான் டாக் மற்றும் 'கொச்சின் ஷிப்யார்டு' நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இதில், மசகான் டாக் மட்டுமே 18,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இதன் வாயிலாக மொத்தம் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என இந்நிறுவனம் காத்திருந்த நிலையில், கடந்தாண்டு டிச., 7ம் தேதி மதுரையில் நடந்த 'டி.என்., ரைசிங்' முதலீட்டாளர் மாநாட்டில், அப்போதைய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தென்கொரியாவை சேர்ந்த எச்.டி., ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு பிரத்யேக ஒப்பந்தம் மேற்கொண்டது.

உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாக அறியப்படும் எச்.டி., ஹூண்டாய், துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கிட்டத்தட்ட 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது.  இந்நிலையில், நீண்ட காத்திருப்புக்கு பின் மசகான் டாக் நிறுவனம், துாத்துக்குடி திட்டத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வித வெளிப்படையான ஏல முறையுமின்றி, திடீரென வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கப்பல் கட்டுமான மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் முறையான வழிகாட்டுதல்கள் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே, அவசர அவசரமாக வெளிநாட்டு நிறுவனத்துடன் முந்தைய அரசு பிரத்யேக ஒப்பந்தம் செய்துள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுகள் செயல்பட்டு வரும் நிலையில், ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே, அதிருப்தியடைந்த மசகான் டாக் நிறுவனம், தற்போது ஆந்திராவில் 29,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, மாபெரும் கப்பல் கட்டும் மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை முழுவீச்சில் ஆராய்ந்து வருகிறது.