Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

7 ஆனி 2026 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 225


ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஈரான் ஏவிய ஆளில்லா வானூர்திகளை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, ஈரானின் கடலோர ரேடார் கண்காணிப்பு தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் இடையே மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.

பிராந்திய கடல்சார் போக்குவரத்தை இலக்கு வைத்தே ஈரானின் 4 ஆளில்லா வானூர்திகள் ஏவப்பட்டதாக அமெரிக்க இராணுவம் நம்புகிறது.

இதனைத் தொடர்ந்தே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் அமைந்திருந்த ஈரானின் கண்காணிப்பு தளங்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது.

வொஷிங்டனுக்கு பதற்றத்தைத் தணிக்கும் எண்ணம் இல்லை என்பதை இது காட்டுவதாகவும் ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் அனுமதியின்றி நீரிணையைக் கடக்க முயன்ற 4 எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலாகச் சென்ற 7 பயங்கரவாத ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பஹ்ரைன் நாட்டில் அபாயச் சங்கொலிகள் எழுப்பப்பட்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.