Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட் எல்லை திட்டம் விரைவில் அமல்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஸ்மார்ட் எல்லை திட்டம் விரைவில் அமல்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

7 ஆனி 2026 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 156


ஸ்மார்ட் எல்லைத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில் அதிநவீன தொழில்நுட்பம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஒருங்கிணைக்கப்படுவர்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் எல்லைப் பகுதிகளை வலிமைப்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட் எல்லை திட்டம் அமைக்கும் பணியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கான பணிகள், தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் லங்கமுரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் எல்லைப் படை வீரர்களை சந்தித்து அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசின் ஸ்மார்ட் எல்லைத் திட்டம், நம் நாட்டின் எட்டு இடங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப்பொருள் வினியோகம் என ஒவ்வொரு எல்லைப் பகுதியும் தனித்துவமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், நம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவற்றை திறம்பட எதிர்கொண்டு வருகின்றனர்.

ஸ்மார்ட் எல்லை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உள்ளூர் நிர்வாகம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோரும் ஒருங்கிணைக்கப்படுவர்.

வரும், 2047க்குள் நாம் வளர்ந்த நாடாக மாற, எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும். ஊடுருவலை தடுப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து அவர்களை நம் நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்