Paristamil Navigation Paristamil advert login

காசா கப்பற்படை விவகாரம்: சித்திரவதை மற்றும் போர்க்குற்றம் குறித்துப் பிரான்ஸ் விசாரணை!!

காசா கப்பற்படை விவகாரம்: சித்திரவதை மற்றும் போர்க்குற்றம் குறித்துப் பிரான்ஸ் விசாரணை!!

5 ஆனி 2026 வெள்ளி 21:49 | பார்வைகள் : 265


பிரான்சின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT), காசா நோக்கிச் சென்ற “Global Sumud Flotilla” கப்பற்படையில் இருந்த பிரெஞ்சு செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. 

இந்த நடவடிக்கை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் அறிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோவின் தகவலின்படி, பிரெஞ்சு குடிமக்கள் பாலியல் வன்முறை, குளிரில் வைக்கப்படுதல், தாக்குதல் மற்றும் அவமானப்படுத்தல் போன்ற மோசமான நடத்தைகளுக்கு ஆளானதாகத் தூதரக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

துருக்கியில் இருந்து புறப்பட்ட இந்த கப்பற்படை, காசாவின் மனிதாபிமான நெருக்கடியை உலகின் கவனத்திற்கு கொண்டு வரவும், இஸ்ரேலின் முற்றுகையை எதிர்க்கவும் முயன்றது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் 430 செயற்பாட்டாளர்களை, அதில் சுமார் 30 பிரெஞ்சு குடிமக்களையும், மத்தியதரைக் கடலில் கைது செய்து பின்னர் இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்தனர். அதன் பிறகு அவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி, அதில் சில செயற்பாட்டாளர்கள் முழங்காலில் அமர்த்தப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதால், சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கப்பற்படையைத் தடுக்க இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகக் கூறியிருந்தாலும், அந்த வீடியோவில் காணப்பட்ட காட்சிகள் இஸ்ரேலின் மதிப்புகளுக்கு ஏற்ப அல்ல என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், அமைச்சர் இதாமர் பென் க்விருக்கு (Itamar Ben Gvir) தனது எல்லைக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.