Paristamil Navigation Paristamil advert login

GoVolta தொடருந்தில் வெறும் 19 யூரோவில் பரிஸ்–ஆம்ஸ்டரடாம் பயணம்!!

GoVolta தொடருந்தில் வெறும் 19 யூரோவில் பரிஸ்–ஆம்ஸ்டரடாம் பயணம்!!

4 ஆனி 2026 வியாழன் 22:05 | பார்வைகள் : 385


நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான GoVolta, பரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு இடையே தினசரி ரயில் சேவைக்கான டிக்கெட்டுகளை 19 யூரோ முதல்  விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த சேவை 14 டிசம்பர் 2026 முதல் இயக்கப்படும். இது தற்போது இந்த வழித்தடத்தில் முன்னிலை வகிக்கும் Eurostar நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக அமைகிறது.

20 யூரோவுக்கும் குறைவான விலையில் பரிஸ்–ஆம்ஸ்டர்டாம் ரயில் பயணசீட்டு என்பது நம்ப முடியாத சலுகையாகத் தோன்றலாம். ஆனால் அது உண்மையே. 28 மே 2026 முதல் GoVolta தனது முன்பதிவு சேவையைத் திறந்துள்ளது. இதன் மூலம், இதுவரை Eurostar ஆதிக்கம் செலுத்திய சந்தையில் புதிய போட்டி உருவாகியுள்ளது.

சுமார் 7 மணி நேரம் நீளமான இந்தப் பயணம், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள 11 நிலையங்களில் நிற்கும். அவையாவன:

  • Paris Gare du Nord
  • Arras
  • Longueau (Amiens)
  • Gand-Saint-Pierre
  • Anvers-Central
  • Roosendaal
  • Lage Zwaluwe
  • Rotterdam-Central
  • La Haye HS
  • Haarlem
  • Amsterdam Centraal

GoVolta நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் வணிக இயக்குநரான Hessel Winkelman கூறுகையில், இந்த சேவை தலைநகரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு மட்டுமல்லாமல், சிறிய நகரங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், ஏற்கனவே சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள பிரஸ்ஸல்ஸை தவிர்த்து, 2.6 லட்சம் மக்கள்தொகையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க கென்ட் நகரை GoVolta தேர்வு செய்துள்ளது. பரிஸ் அல்லது ஆம்ஸ்டர்டாமிலிருந்து கென்டுக்கு நேரடி சர்வதேச ரயில் இணைப்பு இதுவரை இல்லை. 

மேலும், 2009-இல் Thalys (இப்போது Eurostar) சேவைகள் குறைக்கப்பட்டபின் இழந்த நேரடி சர்வதேச ரயில் இணைப்பை ஹேக் நகரம் மீண்டும் பெறுகிறது. உள்நாட்டு வழித்தடங்களுக்கு பயணசீட்டு விலை 10 யூரோக்கள் முதல் தொடங்குகிறது.

இந்த ரயிலில் மொத்தம் 11 பெட்டிகள் இருக்கும்:

  • 9 Economy வகுப்பு பெட்டிகள்
  • 1 Comfort வகுப்பு பெட்டி
  • 1 உணவக பெட்டி

மொத்தமாக 840 பயணிகள் வரை பயணிக்க முடியும். GoVolta இதுவே முதல் முயற்சி அல்ல. 18 மார்ச் 2026 அன்று, ஆம்ஸ்டர்டாம்–பெர்லின் வழித்தடத்தில் புதிய சேவையை நிறுவனம் தொடங்கியது. அந்தப் பயணம் சுமார் 6 மணி 30 நிமிடங்கள் நீடிக்கும்; பயணசீ்சீட்டு விலை 10 யூரோக்கள் முதல் தொடங்குகிறது. 

தற்போது நெதர்லாந்து–ஜெர்மனி வழித்தடங்களில் 90,000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவையளித்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், “நெகிழ்வான தேதிகள்” (Flexible Dates) என்ற விருப்பத்தின் மூலம், பயணத் தேதியைப் பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்பு வரை வெறும் 1 யூரோ கட்டணத்தில் மாற்றிக்கொள்ள முடியும்.