கேரள மாநிலத்தின் மொத்த கடன் சுமை ரூ.5.07 லட்சம் கோடி!
5 ஆனி 2026 வெள்ளி 06:21 | பார்வைகள் : 172
கேரளாவின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை, நிதித் துறையை கவனிக்கும் அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தின் மொத்த கடன் சுமை, 5.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாகவும், பொதுத் துறை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரித்து உள்ளதாகவும், நாட்டிலேயே மிகக் குறைந்த மூலதன செலவுள்ள மாநிலமாக கேரளா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 140 தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 102ல் வென்று, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. பல கட்ட இழுபறிக்கு பின், காங்கிரசைச் சேர்ந்த வி.டி.சதீசன் முதல்வராக பதவியேற்றார்.
ஆளுங்கட்சியாக இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, வெறும், 32 தொகுதிகளையே கைப்பற்றியது. நிதித் துறையையும் கவனிக்கும் முதல்வர் வி.டி.சதீசன், 'கேரளாவின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்' என, சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள சட்டசபையில் மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் வி.டி.சதீசன் நேற்று தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
கேரளாவின் மொத்த கடன் சுமை, 5.07 லட்சம் கோடி ரூபாய். மாநிலத்தின் வருவாயில், 77 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுகிறது. இதில் வட்டி செலுத்துவதற்கு மட்டும், 20.9 சதவீதம் செலவாகிறது. இதனால், வளர்ச்சி பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்து விட்டது.
மாநிலம் மிக அதிகளவிலான நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும், 1.3 சதவீதம் மட்டுமே மூலதன செலவாக உள்ளது. தேசிய அளவில் ஒப்பிடுகையில், இது, மிகவும் குறைவு.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிலுவைகள் உட்பட மொத்தம், 48,733 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை பொறுப்புகளை புதிய அரசு ஏற்றுள்ளது.
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம், 21,000 கோடி ரூபாய் அளவிலான நிலுவைக் கடனை கொண்டுள்ளது. கேரள பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு, 78,851 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம், கேரள குடிநீர் வாரியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களே இதற்கு காரணம்.
எஸ்.சி., - எஸ்.டி., சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. மேலும், எதிர்பார்த்ததை விட குறைவாகவே மாநில வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவியும் குறைந்துள்ளது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு இவையே முக்கிய காரணம்.
சவால்கள் அதிகரித்த போதும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது ஆகிய துறைகளில் தொடர் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் கேரளாவின் நிதி சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்து, முதல்வர் சதீசன் கூறியதாவது:
இது, கேரளாவின் நிதி நிலை குறித்த ஒரு உண்மை அறிக்கையே தவிர, அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. நிதியமைச்சகத்தின் மேற்பார்வையில், பொதுவெளியில் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் வெள்ளை அறிக்கைகள் அரசியல் ஆவணங்களாகவே இருந்தன. ஆனால், இந்த அறிக்கை அப்படி அல்ல. நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், கேரளாவின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான ஒரு வரைபடமாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், ''இந்த அறிக்கை நிதியமைச்சகத்தால் வழக்கமான முறையில் தயாரிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது, அரசியலமைப்பு மீறல்,'' என்றார்.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் கூறுகையில்,
''வெள்ளை அறிக்கைகளை இதுவரை நிதியமைச்சகமே தயாரித்து வந்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை முறைப்படி தயாரிக்கப்படவில்லை. இது, அரசியல் ஆவணமாகவே உள்ளது. காங்., கூட்டணி அரசின் கொள்கை விளக்க உரையில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த தெளிவான திட்டங்கள் இல்லை,'' என்றார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த முதல்வர் சதீசன்,
''வெள்ளை அறிக்கையை முழுமையாக படிக்காமலேயே, அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என, எதிர்க்கட்சிகள் எவ்வாறு முடிவு செய்தன?'' என, கேள்வி எழுப்பினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan