Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் டாப் 10 பெரும் பணக்கார முதல்வர்கள் பட்டியல்; 3வது இடத்தில் முதல்வர் விஜய்

நாட்டின் டாப் 10 பெரும் பணக்கார முதல்வர்கள் பட்டியல்; 3வது இடத்தில் முதல்வர் விஜய்

4 ஆனி 2026 வியாழன் 12:07 | பார்வைகள் : 210


நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலக்ஙளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முதல் இடத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், 2வது இடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளனர். 3வது இடத்தை தமிழக முதல்வர் விஜய் பிடித்துள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்று அழைக்கப்படும் ஏடிஆர் (ADR) என்ற அமைப்பானது நாட்டின் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படும் ஒரு அமைப்பாகும்.

அவ்வப்போது பல்வேறு கட்சிகள் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை வெளியிட்டு ஓட்டு போடுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு உள்ளது.

அந்த வகையில் நாட்டின் 5 பணக்கார முதல்வர்கள் யார் என்ற விவரத்தை வெளியிட்டு உள்ளது. அதன்படி முதலிடத்தில் கர்நாடகாவின் முதல்வரான டி.கே.சிவகுமார் இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1413 கோடி. அவரின் பெருமளவு சொத்து நிலம் மற்றும் அசையா சொத்துகளில் காட்டப்பட்டு உள்ளது. அவரது சொத்துகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மூதாதையர்களிடம் இருந்து வந்தவை ஆகும்.

அது மட்டுமல்லாமல் தலைநகர் டில்லி, பெங்களூரு, மைசூரு, கனகபுரா உள்ளிட்ட நகரங்களில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளாகவும் அவரது சொத்துகள் உள்ளன.கல்வி அறக்கட்டளைகள், சுரங்கம், பரஸ்பர நிதிகள், வங்கி வைப்புத் தொகைகளும் டி.கே. சிவகுமார் சொத்து மதிப்பில் அடங்கும். இவருக்கு உள்ள கடன் தொகை ரூ. 265 கோடி.

டி.கே. சிவகுமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் முன்பாக நாட்டின் பெரும் செல்வந்தர் முதல்வர் என்ற பட்டியலில் இருந்தவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இப்போது 2வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.931 கோடி.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பானது டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இவரின் சொத்துகளில் 87 சதவீதம் அசையும் சொத்துகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வரும் நிறுவனங்களில் தொடர்பு உடையதாகும். பங்குச் சந்தைகளிலும் இவரின் முதலீடுகள் கணிசமான இடத்தை பிடித்துள்ளன.

3வது பெரும் பணக்கார முதல்வராக இடம் பிடித்தவர் தமிழக முதல்வர் விஜய். இவரின் சொத்து மதிப்பு ரூ.648 கோடி. தேர்தல் நேரத்தில் இதை அவர் தமது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். தமது சேமிப்பு கணக்கில் ரு.213 கோடி, பல்வேறு வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக வைத்துள்ளார். மற்ற இரு முதல்வர்களை போல் அல்லாமல் விஜய்க்கு பங்குச் சந்தை முதலீடுகள் குறைவே.

தென்னிந்தியாவில் இவர்கள் 3 பேரை தவிர, கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நாட்டின் பெரும் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கின்றனர்.

ஒட்டு மொத்தமாக முதல் 10 இடங்களில் தென்னிந்தியாவின் 5 முதல்வர்கள் இடம் பிடித்துள்ளனர்.