Paristamil Navigation Paristamil advert login

திருமணம் செய்தால் கேன்சர் அபாயம் குறையுமா? புதிய ஆய்வு விளக்கம்

திருமணம் செய்தால் கேன்சர் அபாயம் குறையுமா? புதிய ஆய்வு விளக்கம்

23 சித்திரை 2026 வியாழன் 15:17 | பார்வைகள் : 161


திருமணம் செய்தவர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாக இருக்கலாம் என புதிய ஆய்வு கூறுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு அதிக கேன்சர் ஆபத்து காணப்பட்டாலும், சமூக ஆதரவு மற்றும் வாழ்க்கை முறைகளே முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

திருமணம் என்பது வெறும் உணர்ச்சி பூர்வமான பந்தம் மட்டுமல்ல நீண்ட கால உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கலாம் என சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
​'Cancer Research Communications' இதழில் வெளியான இந்த ஆய்வு, திருமண நிலைக்கும் புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே உள்ள வியக்கத்தக்க தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், திருமணமானவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது

ஆய்வு சொல்லும் புள்ளிவிவரங்கள்

ஆய்வின்படி, திருமணம் செய்யாத ஆண்களுக்கு, திருமணமானவர்களை விட 68 சதவீதம் புற்றுநோய் அபாயம் அதிகம். அதேநேரம், திருமணம் செய்யாத பெண்களுக்கு இன்னும் அதிகமாக 83 சதவீதம் வரை அபாயம் அதிகரிக்கிறது.

இதில் திருமணமானவர்கள் என்றால் விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் துணையை இழந்தவர்களும் அடங்கும்.

திருமணம் புற்றுநோய் அபாயத்தை எப்படி குறைக்கிறது?

திருமணம் புற்றுநோயை நேரடியாக தடுக்க செய்யாது. ஆனால், கேன்சரை தடுக்கும் சில காரணிகளுக்கு திருமணம் செய்வது உதவிப்புரிகிறது.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் - திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணை இருப்பதால், சத்தான உணவு மற்றும் சரியான நேரத்திற்கு மருந்துகளை உட்கொள்கின்றனர்.
ஆரம்பக்கால கண்டறிதல் - உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் வாழ்க்கை துணை கவனித்து மருத்துவரிடம் செல்ல அறிவுறுத்துகிறார். இதனால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலே கண்டறிய முடிகிறது.
குறைவான மன அழுத்தம் - தனிமையில் இருப்பவர்களை விட, துணையுடன் இருப்பவர்களுக்கு சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு கிடைப்பதால், மன அழுத்தம் குறைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சிகரெட், ஆல்கஹால் குறைவு - திருமணமானவர்களிடம் அதிகமாக சிகரெட் பிடித்தல் அல்லது ஆல்கஹால் அருந்தும் பழக்கம் இருக்காது. இவை நுரையீரல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணிகள் ஆகும்.​

பாலினம் சார்ந்த புற்றுநோய் அபாயங்கள்
திருமணமான ஆண்களை விட திருமணம் செய்யாத ஆண்களுக்கு குத புற்றுநோய் (Anal cancer) ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், திருமணமாகாத பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயம் 3 மடங்கு அதிகமாக இருப்தாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர, குழந்தை பெற்றெடுக்காத பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயம் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மகப்பேறு இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

திருமணத்தை விட ஆதரவே முக்கியம்
திருமணம் செய்துகொண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும் என்பதில்லை. குடும்பம், நண்பர்கள் அல்லது உறவினர்கள் என நம்மைச் சுற்றி அன்பும் ஆதரவும் வழங்கும் நபர்கள் இருந்தாலே, எந்த நோயையும் எதிர்கொள்ளும் மனவலிமை மற்றும் உடல் நல பாதுகாப்பு நமக்கு கிடைத்துவிடும் என்பதே இந்த ஆய்வு வெளிப்படுத்தும் முக்கிய கருத்தாகும்.