Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., தோற்கணும்; தமிழகம் ஜெயிக்கணும்: ஆந்திர முதல்வர் புது கோஷம்

தி.மு.க., தோற்கணும்; தமிழகம் ஜெயிக்கணும்: ஆந்திர முதல்வர் புது கோஷம்

21 சித்திரை 2026 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 209


தி.மு.க., தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும், என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தார்; கோவையில் தனியார் ஹோட்டலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ., - அ.தி.மு.க., பிரமுகர்களை அவர் சந்தித்தார். கோவையைச் சேர்ந்த முக்கிய தொழில் அமைப்பினரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ''ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளிலேயே, கூகுள் நிறுவனம், டேட்டா சென்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் என தகவல் தொழில்நுட்ப மையங்களை 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொண்டுள்ளோம். அமராவதியில் 2,500 ஏக்கரில் விமான நிலையம் அமையவிருக்கிறது.

கோவை விமான நிலையத்துக்கு 500 ஏக்கர் நிலம் கொடுக்கவே, தி.மு.க., அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.

தி.மு.க., ஆட்சியில், மோசம் இல்லாத கிராமம் இல்லை; நாசம் பண்ணாத நகரம் இல்லை. எனவே, 'தி.மு.க., தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும்,'' என்றார்

பின், சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சென்னை பொலிவை இழந்து விட்டது. பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.


லோக்சபாவில் தொகுதி மறுவரையறை, பெண்கள் மசோதாவை தோற்கடித்தது, தென் மாநில மக்களுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. டில்லியை தோற்கடித்து விட்டதாக தி.மு.க., சொல்கிறது. உண்மையில், தென் மாநிலங்களின் பங்கை தோற்கடித்துள்ளீர்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராடி வருகின்றனர். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, வாஜ்பாய் ஆகியோர் முயன்றனர்; நடக்கவில்லை. இப்போது, பிரதமர் மோடி கொண்டு வந்ததையும் தோற்கடித்து விட்டு, எதையோ சாதித்து விட்டதாக நினைக்கின்றனர்.

தி.மு.க., கோரிக்கைப்படி வரும் 2027ல் நடக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படும், இதற்கு தயாராக உள்ளீர்களா? இவ்வாறு பேசினார்.