Paristamil Navigation Paristamil advert login

யாரையும் விமர்சித்து பேச விரும்பவில்லை: விஜய் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

யாரையும் விமர்சித்து பேச விரும்பவில்லை: விஜய் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

21 சித்திரை 2026 செவ்வாய் 07:59 | பார்வைகள் : 173


உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றுபவர் வேண்டுமா அல்லது எங்கிருந்தோ வந்து, நாடகம் நடிப்பவர் வேண்டுமா என, பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரை குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின்  பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல், டில்லிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தேர்தல். சமீபத்தில், மத்திய பா.ஜ., அரசுக்கு பெரிய அடி விழுந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்ய, பார்லிமென்டில் மசோதா கொண்டு வந்தனர். தேர்தல் நேரத்தில் கொண்டு வந்தால், எம்.பிக்கள், அவைக்கு வர முடியாது என எண்ணினர். ஆனால், நமக்கு தேர்தல் முக்கியம் கிடையாது.

தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதே அவசியம். அதனால், அனைத்து எம்.பி.க்களையும், பார்லிமென்ட் செல்ல அறிவுறுத்தினேன். ஓட்டெடுப்பில் அந்த மசோதா தோல்வி அடைந்தது. பாஜ கூட்டணி கட்சி எம்.பி.க்களும், அதற்கு எதிராக ஓட்டளித்தனர். மத்திய அரசுக்கு கவுன்டவுண் தொடங்கி விட்டது.

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களுடன் இருந்து, உங்களுக்காக பணியாற்றும், உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றும் ஒருவர் வேண்டுமா அல்லது எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து, நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர் வேண்டுமா என, சிந்தித்து பாருங்கள்.

நான் யாரையும் அரசியலில் தாக்கியும் விமர்சித்தும் பேச விரும்பவில்லை. அந்த பழக்கமும் எனக்கு கிடையாது. யாரையும் எதிர்த்து, தரக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. தி.மு.க., ஆட்சியில், தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதப் பணிகளை முடித்து விட்டோம். மீதம் 10 சதவீதப் பணிகள் உள்ளன. ஏனெனில், மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தில்லுமுல்லு செய்து டில்லியில் வெற்றிடில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து, திரு.வி.க.,நகரில் பிரசாரம் செய்த, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கெஜ்ரிவால், மிகப்பெரிய போராளி, எந்தவித அச்சுறுத்தலுக்கும் பயப்படாதவர். பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருகிறார். இரண்டு முறை டில்லியில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர். மூன்றாவது முறையாகவும், வெற்றி பெற்றிருப்பார்.  ஆனால், திட்டமிட்டு வேண்டுமென்றே, அவரை முடக்க வேண்டும் என்பதற்காக, அவரின் தளபதிகளாக இருந்த பல அமைச்சர்களை கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்தனர். ஆனால், ஆதாரம் இல்லை என, உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. அந்த சூழலில், டில்லியில் தேர்தல் நடத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி, தில்லுமுல்லு செய்து பா.ஜ., வெற்றி பெற்றது. அது குறித்து கவலைப்படாமல் கெஜ்ரிவால், பா.ஜ.வை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின், சென்னையில் பிரசாரம் செய்தார். அதேபோல், த.வெ.க., தலைவர் விஜய், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் துவங்கி, மாதவரம், அண்ணாநகர், திரு.வி.க.,நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தார். விஜய், தன் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல், பொன்னேரி வரை, ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால், ஸ்டாலின் பிரசாரத்தில் சிக்கல் ஏற்படும் என்பதால், விஜய் பிரசார வாகனத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், பொன்னேரியில் இருந்து வில்லிவாக்கம் வரை, அவரது பிரசார வாகனம் வேகமாக வந்து சேர்ந்தது. இதனால், எவ்வித சிரமமும் இன்றி, திட்டமிட்ட நேரத்தில், விஜய் பிரசாரம் செய்தார். முதல்வர் ஸ்டாலினும், சிரமமின்றி, இரவு வரை திட்டமிட்டபடி பிரசாரத்தை முடித்தார்.