Paristamil Navigation Paristamil advert login

நீண்ட நாள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தேவையான 4 முக்கிய அம்சங்கள்

நீண்ட நாள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தேவையான 4 முக்கிய அம்சங்கள்

19 சித்திரை 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 237


திருமண உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க அன்பு மட்டும் போதாது என்பதை ஒவ்வொரு தம்பதியினரும் புரிந்துகொள்ள வேண்டும். பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நீண்ட கால உறவுக்கு தேவையான 4 விஷயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை விவாகரத்து வாய்ப்பை குறைப்பதாக நம்பப்படுகிறது

திருமண உறவின் ஆரம்ப கட்டத்தை தேனிலவு காலம் என அழைப்பார்கள். அந்த நாட்களில் மணிக்கணக்கில் பேசுவது, ஒன்றாக நேரம் செலவிடுவது, சுற்றுலா செல்வது போன்ற தருணங்கள், வாழ்க்கையை இனிமையாக மாற்றும். ஆனால், காலம் செல்ல செல்ல யதார்த்தம் தெரிய ஆரம்பிக்கும்.

திருமண வாழ்க்கை நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும் நிலைத்ததாகவும் இருக்க வெறும் அன்பு மட்டும் போதாது. அதற்கு புரிதல், பொறுப்பு உணர்வு மற்றும் சில நல்ல பழக்கவழக்கங்களும் அவசியம்.

திருமணத்தின் முதுகெலும்பே ஒருவருக்கொருவர் காட்டும் அர்ப்பணிப்புதான். "நாங்கள் இருவரும் இணைந்தே இருப்போம்" என்ற உறுதிமொழி, தம்பதிகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது.

மற்ற எல்லா வேலைகளையும் விட துணைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, திருமணத்தை வாழ்நாள் பயணமாக கருதுவது, கஷ்டமான காலங்களிலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பது ஆகியவை அர்ப்பணிப்பின் முக்கியமான கூறுகள் ஆகும்.

ஆராய்ச்சிகளின்படி, தம்பதிகளுக்கு இடையே இருக்கும் அதிக அர்ப்பணிப்பு, திருமண வாழ்க்கையில் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

பாதுகாப்பான துணை
பாதுகாப்பு என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல மன ரீதியான பாதுகாப்பையும் குறிக்கிறது.


மன அழுத்தமான நேரங்களில் ஆதரவாக இருப்பது, உண்மை மற்றும் விசுவாசத்துடன் நடந்துகொள்வது, பிறர் முன்னிலையில் பார்ட்னரை விட்டுக் கொடுக்காமல் பேசுவது, துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது ஆகியவை அடங்கும். இவை தம்பதிகள் இடையே பாதுகாப்பு பிணைப்பை வலுப்படுத்துவதுடன், மோதல்களையும் குறைக்கிறது.


இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தங்கள் துணை தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது, ஆண்களும் பெண்களும் சரிசமமாக அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரே மாதிரியான ஆன்மீக நம்பிக்கைகள்
ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஒன்றாக ஈடுபடும் தம்பதிகள், அதிக மகிழ்ச்சி மற்றும் வலிமையான உறவை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தம்பதிகள் இடையே ஒரே நோக்கம் உருவாகுதல் மற்றும் புரிதல் அதிகரித்து கருத்து வேறுபாடுகள் குறையக்கூடும்.


இதுதவிர, ஒரே மாதிரியான லட்சியங்கள், குடும்ப மதிப்பு மற்றும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை பின்பற்றுதல் போன்ற சூழ்நிலையை உருவாக்கி மனநிறைவை அளிக்கும்.

அடிக்கடி ‘Date Night’ செல்வது
பிற வேலைகளில் பிஸியாக இருப்பதால், கணவன் மனைவி ஒன்றாக நேரம் செலவிடாமல் போக வாய்ப்புள்ளது. இதற்கு சிறந்த தீர்வாக ‘Date Night’ திகழ்கிறது.

அவை உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை அதிகரிக்கும், தகவல் தொடர்பை மேம்படுத்தும் மற்றும் உறவில் புத்துணர்ச்சி உருவாகும்.

அவை பெரிய விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்றாக நடைப்பயிற்சி செல்வது, சேர்ந்து படம் பார்ப்பது அல்லது ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களும் உறவை பலப்படுத்தும்.

ஏன் இந்த 4 அம்சங்கள் முக்கியம்?
மேலே குறிப்பிட்டுள்ள 4 விஷயங்களை திருமண உறவை மகிழ்ச்சியானதாக மாற்றி, கணவன் - மனைவி இடையிலான விவாகரத்து முடிவுகளை குறைக்க உதவிப்புரியும்.

சிறந்த திருமண வாழ்க்கை என்பது தற்செயலாக அமைவது அல்ல. அவை நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வாயிலாக மட்டுமே உருவாகும்.

சிறு சிறு மாற்றங்கள் உங்கள் உறவில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும்.
துணைக்கு முக்கியத்துவம் கொடுங்கள், துணைக்கு மதிப்பு அளியுங்கள், ஒருவருக்கொருவர் நேரம் செலவிடுங்கள் அப்போதுதான் திருமண வாழ்க்கை நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும் உறுதியாகவும் இருக்கும்.

 

 

 

எழுத்துரு விளம்பரங்கள்