தி.மு.க.,வினரின் 10 கூடாரங்கள் அகற்றம்; கோவை தெற்கு தொகுதியில் நடவடிக்கை
17 சித்திரை 2026 வெள்ளி 11:55 | பார்வைகள் : 149
அ.தி.மு.க., புகார் கொடுத்ததை தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.,வினர் அமைத்திருந்த கூடாரங்களில், 10 இடங்களில் மட்டும் தேர்தல் பிரிவினர் நேற்று அகற்றினர்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்காளர்களை அடைத்து வைக்கும் வகையில் கூடாரம் (பட்டி) அமைப்பதாக, அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரிடம் மனு கொடுத்தார். அதற்காக ஆதாரமாக, 40 இடங்களில் கூடாரம் அமைத்து இருப்பது தொடர்பான போட்டோக்கள் இணைத்திருந்தார்.
கோவை வந்த மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, அ.தி.மு.க., வக்கீல் அணியினர் நேரில் சந்தித்து முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், எந்தெந்த இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அவற்றை அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக, 10 இடங்களில் அகற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில், சுயேட்சை வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகம் என்பது போல் கணக்கு காட்டப்பட்டு இருந்தது.
இச்சூழலில், கெம்பட்டி காலனி வைசியாள் வீதியில் சுயேட்சை வேட்பாளர் ஹக்கீம் என்பவர், தற்காலிக தேர்தல் பணிமனை அமைக்க தேர்தல் பிரிவிடம் அனுமதி கோரியிருக்கிறார். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் துாரத்துக்குள் அமைவதால், பணிமனை அமைக்க அனுமதி மறுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அனுமதி இல்லாமலேயே அவ்விடத்தில் கூடாரம் அமைக்கப்பட்டு, தேர்தல் வேலைகள் செய்யப்பட்டு வந்தன. இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினருக்கு புகார் சென்றது.
பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு, தி.மு.க., கொடிகள், போஸ்டர்கள், காலண்டர்கள், பிளாஸ்டிக் சேர்கள் இருந்தன. பறக்கும் படையினர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அக்கூடாரம் நேற்று பிரித்து அகற்றப்பட்டது. மற்ற இடங்களில் கூடாரங்கள் இன்னும் இருக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan