Paristamil Navigation Paristamil advert login

சொத்து விபரங்களை விஜய், ஆதவ் மறைத்தது குறித்து விசாரிக்க வழக்கு

சொத்து விபரங்களை விஜய், ஆதவ் மறைத்தது குறித்து விசாரிக்க வழக்கு

17 சித்திரை 2026 வெள்ளி 10:50 | பார்வைகள் : 179


த.வெ.க., தலைவர் விஜய், வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், சொத்து விபரங்களை மறைத்தது குறித்து, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும்; த.வெ.க.,வின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இரு தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்று உள்ளன; பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் சொத்து மதிப்பு 115 கோடி ரூபாய் என குறிப்பிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவில், 220 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விஜய் தெரிவித்து உள்ள சொத்து விபரங்கள் முழுமையானவையா; உண்மையானவையா என, வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், 117 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட, 'மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்' மற்றும் 123 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட, 'டாமினன்ட் டவர்ஸ் அண்டு டிரேடர்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ள, தன் மனைவி டெய்சிக்கு சொந்தமான சொத்துக்களின் விபரங்களை மறைத்துள்ளார்.

தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அதை முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டார். தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சொத்து விபரங்களை மறைத்தது குறித்து விசாரிக்க வேண்டும் என, வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் என்பவரும் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்