Paristamil Navigation Paristamil advert login

ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

16 சித்திரை 2026 வியாழன் 13:13 | பார்வைகள் : 192


அன்று இருந்த பழனிசாமி வேறு; இனி மேல் வரும் பழனிசாமி வேறு. நடுநிலையாக நடக்காத அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக துணிச்சலாக நடவடிக்கை எடுப்பேன். சொன்னதை செய்வான் பழனிசாமி'' என கோவை பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆவேசமாக பேசினார்.

கோவை வடக்கு மற்றும் தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சித்தாபுதூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவியது. அந்த கொடிய நோயை விட மிகக் கொடுமையான ஒன்று,

கரூரில் இருந்து காற்றில் வந்து கோவை தெற்கு தொகுதியில் பரவியிருக்கிறது. திரும்பச் சொல்கிறேன் கொரோனாவுக்குக் கூட மருந்து இருக்கிறது, இப்போது இங்கு வந்திருக்கும் வைரஸுக்கு மருந்தே இல்லை. உங்கள் வாழ்க்கையை முடித்துக் கட்டிவிடுவார். கரூரை காலி செய்துவிட்டு, கோவை தெற்கில் நுழைந்திருக்கிறார், அவரை விரட்டி அடிப்பீர்களா? சிந்தியுங்கள்.

ஆண்டவன் மூளையை நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் ஆண்டவன் கொடுத்த மூளையை வைத்து, தவறாக சிந்திப்பதே தீய எண்ணம்தான்.  அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும், நான் பெயர் சொல்ல விரும்பவில்லை, அதற்குத் தகுதியில்லாதவர். 10 ரூபாய்க்கு மதிப்பு  கொடுத்தவர் பற்றி ஸ்டாலின் சொல்கிறார்,

மேற்கு மண்டலத்தின் சிம்ம சொப்பனமாக இருந்தவர், கோடு போட்டால் ரோடு போடுவாரம், ரோடு போடமாட்டார் ரோடு போட்ட மாதிரி படம் எடுப்பார். கரூரில் ரோடு போடாமல் படத்தை எடுத்து, நான் சட்டமன்றத்தில் பேசி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பேசிய வாய் தான் அப்போதும் பேசியது. செந்தில் பாலாஜியை என்னவெல்லாம் பேசினீனார்..?  இதே ஸ்டாலின் கரூரில் முன்பு பேசும்போது அவர்  மோசமானவர் என்றார், அசிங்கப்படுத்தினார்.

ஒரு ரூபாய் செலவு பண்ணினால், என்ன கிடைக்கும் என்று முதல் போட்டு லாபம் எடுக்கும் அரசியல் வியாபாரி. இப்போது பார்த்தால் கவர்ச்சியாகத் தெரியும், ஆனால் ஏமாந்துவிடாதீர்கள். அவர் ஏன் கரூரில் போட்டியிடவில்லை? நான் எடப்பாடியில் நிக்கிறேன், வேலுமணி தொண்டாமுத்தூரில் நிக்கிறார், கரூரில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் வெளியேறிவிட்டார். நான் எடப்பாடியில் 11வது முறையாக நிற்கிறேன்.

இன்னும் என் தொகுதி மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கவில்லை. நான் தொகுதிக்குப் போகவில்லை என்றாலும், என் மக்கள் என்னை நேசிக்கிறார்கள். இவர் கரூரில் சட்டியைச் சுரண்டி கவுத்தி வைத்துவிட்டார்,  அதனால் இங்கு வந்திருக்கிறார். கோவை செல்வம் கொழிக்கும் பகுதி, இந்தப் பகுதியில் தங்கத்துக்கு முத்திரை வைக்கிறார்கள். ஆனால், இங்கு அவர் முத்திரையை பதித்துவிட்டுப் போய்விடுவார், எனவே, கோவை தெற்கு தொகுதி மக்கள்  விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

அன்று… இன்று…!

கூட்டணி அமைத்தபோது, அமித் ஷா அதிமுக தலைமை என்று சொல்லிவிட்டார், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லிவிட்டார். அப்புறம் எதற்கு டில்லிக்கும், தமிழகத்துக்கும் போட்டி என்கிறிர்கள்? அரைச்ச மாவையே அரைக்கிறார், வேறு ஒன்றும் தெரியாது. பால்டாயில்….  நான் யார் பேரையாவது சொன்னேனா? ஏன் ஒருத்தருக்கு மட்டும் கோபம் வருகிறது, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.  என்னை மட்டுமல்ல என் தொண்டனைக் கூட தொட்டுப்பார்க்க முடியாது.

செந்தில்பாலாஜி சொல்வதைக் கேட்டு கரூரில் அதிமுகவினர் மீது காவல்துறை பொய் வழக்குகள் போட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் அத்தனையும் தோண்டியெடுக்கப்பட்டு, தவறான வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அன்று இருந்த பழனிசாமி வேறு, இன்றுள்ள பழனிசாமி வேறு. ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.

ஆட்சி மாறும் போது காட்சிகள் மாறும், சக்கரம் சுற்றுகிறது. அரசு அதிகாரிகள் நடுநிலையோடு இருக்க வேண்டும். கரூரிலும், கோவை மாவட்டத்திலும் நடுநிலையாக நடக்காத அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன், துணிச்சலாக எடுப்பேன் சொன்னதை செய்வேன் பழனிசாமி.

அதிகாரிகள் சட்டத்தின் படி நடக்க வேண்டும், அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்காக தவறான செயலில் ஈடுபட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

நிச்சயமாக உறுதிபடச் சொல்கிறேன், யாராலும் காப்பாற்ற முடியாது. தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் விட்டுவைக்க மாட்டேன்.

என்ன நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை.  மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள், திமுகவிடம் வாங்கவில்லை. ஒருகட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.  இதுவரை எந்த இடத்திலும் நான் இப்படிப் பேசவில்லை, இங்குதான் பேசியிருக்கிறேன்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்வதை தடுப்பதற்குத்தான் இத்தனை வேலைகள் செய்கிறார் ஸ்டாலின். இதை செய்தால் பெண்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் அதை தடுக்கத்தான் இப்படி கருப்பு கொடி கட்டச்சொல்லி தவறான தகவல் பரப்புகிறார், அதை யாரும் நம்ப வேண்டாம்.

இன்னொரு பெரிய மனிதர் சிதம்பரம். எடப்பாடி பழனிசாமி சொல்வது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார்.  வேறு யார் சொல்ல வேண்டும்..? 
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னார்கள் என்றுதான் சொல்ல முடியும்.

எத்தனை வருஷம் மத்தியில் அமைச்சராக இருந்தீர்கள், தமிழகத்துக்கு என்ன கொண்டு வந்தீர்கள். உங்களுக்கு தமிழகத்தை பற்றி பேசுவதற்குத் தகுதி இருக்கிறதா? என்ன யோக்கியதை இருக்கிறதுது? மக்களை பற்றி  யாரும் கவலைப்படவில்லை. திமுக கூட்டணியில் 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்கள் போய் எத்தனை வருடம் ஆகிவிட்டது, ஏதாவது குரல் கொடுத்தார்களா..?  பெஞ்சை தேய்க்கிறார்கள், மக்கள் ஓட்டுப்போட்டது வேஸ்ட். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்