Paristamil Navigation Paristamil advert login

‘பேச்சுவார்த்தை தான் எங்கள் விருப்பம்! போர் அல்ல – ஈரான் ஜனாதிபதி

‘பேச்சுவார்த்தை தான் எங்கள் விருப்பம்!  போர் அல்ல – ஈரான் ஜனாதிபதி

15 சித்திரை 2026 புதன் 15:33 | பார்வைகள் : 359


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்துவரும் பதற்ற நிலைமையில், இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம் அறிவித்ததுடன், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, அமெரிக்க கடற்படை, ஈரான் கடல் பகுதிகளில் தனது படையினரை குவித்துள்ளது. குறிப்பாக, யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பல் உட்பட, 11 போர் கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian), தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் அரச ஊடகத்திற்கு அவர் வழங்கிய பேட்டியில்,

“எங்கள் நாடு போரை விரும்பவில்லை; மாறாக பேச்சுவார்த்தையை விரும்புகிறது. அமெரிக்கா தனது விருப்பத்தை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடைய வைக்கவோ மேற்கொள்ளும் எந்த முயற்சியும் தோல்வியடையும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சட்டங்களும் மனிதாபிமானக் கொள்கைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்கள், குழந்தைகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகின்றன.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்