Paristamil Navigation Paristamil advert login

கடைசி மூச்சு இருக்கும் வரை களத்தில் நிற்பேன்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடைசி மூச்சு இருக்கும் வரை களத்தில் நிற்பேன்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

15 சித்திரை 2026 புதன் 10:49 | பார்வைகள் : 419


பாஜ தமிழகத்தை பற்றி தவறாக எடைபோட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எப்படிப்பட்ட நிலையில் நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம் என தமிழக மக்கள் உணர வேண்டும் இந்தியா சுதந்திரம் அடைந்த போது பசியும் வறுமையும்தான்  பெரும்பான்மை மக்களின் நிலை இருந்தது. அந்த அவல நிலையை மாற்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது. அதனை பின்பற்றி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்து இருக்கிறோம். ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய நம்மை மத்திய அரசு தண்டிக்க போகிறது. இதற்காக பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் என்பதை வெறும் மாநிலமாகவோ, வெறும் நிலபரப்புகளாக பார்க்கக்கூடாது. 8 கோடி தமிழக மக்களின் உணர்வும், உரிமைக்குரலும் தான் தமிழகம். பாஜ அரசின் செயல் குறித்து பேசினால்  பீயூஷ் கோயல் மோசமாக பேசுகிறார்.  நாவை அடக்கி பேசுங்கள். நீங்கள் தமிழக பாஜவுக்கு மட்டும் தான் பொறுப்பாளர். அதைமறந்துவிட்டு அத்துமீறி பேசுகிறீர்கள். இங்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.

பாஜ தமிழகத்தை பற்றி தவறாக எடைபோட்டுள்ளது. உங்கள் முன் கைகட்டி அடிமையாக இருப்பவர்களை வைத்து தமிழகத்தை பிரதமர் மோடி எடைபோடக்கூடாது. தமிழர்கள் அறிவானவர்கள். சுயமரியாதை உள்ளவர்கள்.  எங்கள் தன்மானம் மீது கைவைத்தால், டில்லியில் இருக்கும் உங்களது ஆணவத்துக்கு கொடுக்கும் பதிலடி  கடுமையானதாக இருக்கும்.

தமிழகம், தமிழினத்துக்காக போராட யார் உள்ளார்கள்.ஈவெரா, காமராஜர்,  அண்ணாதுரை, கருணாநிதி இல்லை என்று நினைத்தீர்களா? அவர்களின் முழு உருவமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்.அவர்களின் ஆற்றல் எல்லாம்,  தமிழக மக்கள் ரூபத்தில், என்கூட கடைசி மூச்சு இருக்கும் வரையில் தமிழக உரிமைகள், தன்மானத்துக்காக களத்தில் நிற்பேன். சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். தமிழகம் இறுதி எச்சரிக்கை கொடுத்துவிட்டது. நெருப்போடு விளையாடவேண்டாம்.

லோக்சபா தேர்தலில் பாஜ வை பிரிந்தது போன்று நாடகம் போட்டார்.  ஆனால், அவரது நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்க முடியாது எனக்கூறி பத்துதோல்வி பழனிசாமி எனபட்டம் கொடுத்தனர். இதில் இருந்தாவது பாடம் கற்றுக் கொண்டாரா.  மீண்டும் பாஜவை தோளில் சுமந்து வருகிறார்.

அண்மையில்  நாகர்கோவிலில் பேசும் இபிஎஸ், கூட்டணி வேறு, கொள்கை வேறு என பேசி உள்ளார். அப்படி என்ன கொள்கை உள்ளது என இபிஎஸ் சொல்லுங்கள் பார்ப்போம். காலைப்பிடி, காலை வாருதல், முதுகில் சவாரி செய்து முதுகை குத்து. இதுதான் உங்களின் கொள்கை.

கட்சியில் இருக்கும் திராவிடம் தெரியாது என சொன்னவர் தானே நீங்கள். உங்களுக்கு திராவிடமும்  தெரியாது. அண்ணாதுரையும் தெரியாது. மண்ணும் தெரியாது. அதனால் தான் ஒட்டுமொத்த தமிழகமும் இபிஎஸ் ஐ அரசியல் அவமானமாக பார்க்கிறது. அப்படிப்பட்ட இபிஎஸ்ஐ முகமூடியை பயன்படுத்தி, டபுள் இன்ஜின் என சொல்லிக்கொள்ளும் தேஜ  திட்டம் போடுகிறது.அதிமுக வெற்றி பெற்றால், தேஜ கூட்டணி வெற்றிதான் என பேச ஆரம்பித்துவிட்டனர்.  இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்