புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு சதவீதம் உச்சம்; இமாலய சாதனைக்கு காரணங்கள் என்ன?
11 சித்திரை 2026 சனி 15:09 | பார்வைகள் : 186
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, 91.23 சதவீதம் என்ற இமாலய உச்சத்தை, ஓட்டுப்பதிவு சதவீதம் எட்டி உள்ளது. கடந்த 1969ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் ஆரம்பித்து, தற்போதைய ஓட்டுப்பதிவு சதவீதமே அதிகம். இந்த சாதனைக்கு ஆறு காரணங்களை அரசியல் நோக்கர்கள் பட்டியலிடுகின்றனர்.
* இந்த தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு வேட்பாளர்கள் பண மழையை பொழிய விட்டதே முதல் காரணம். அரசியல்வாதிகள், ஓராண்டாகவே தொகுதிகளில் வீடு, வீடாக சென்று மிக்சி, கிரைண்டர், அண்டா, குண்டா என, வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது, இனிப்பு, சர்க்கரை, கரும்பு, வெல்லம், கேக் போன்றவற்றை விழாக்கால பரிசாக வழங்கினர். மேலும், மாதந்தோறும் பட்டியல் போட்டு அட்டை தந்து, பரிசு பொருட்களை வீடு தேடி சென்று வழங்கி குஷிப் படுத்தினர்.
இதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டு என்ற வகையில் கணக்கிட்டு குடும்பத்துக்கு, 1,000 -- 2000 ரூபாய் கொடுத்துள்ளனர். தவிர, தேர்தல் முடிந்த பிறகு கூட, தங்கக்காசு தருவோம், மிக்சி, ப்ரிஜ் தருவோம் என, பரிசு கூப்பன்கள் மற்றும் டோக்கன்களை வினியோகம் செய்துள்ளனர். இதனால், மக்கள் கை நீட்டி வாங்கிய பரிசு பொருட்கள் மற்றும் பணத்திற்கு விசுவாசமாக, தவறாமல் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
* வாக்காளர்களின் பயம் இரண்டாவது காரணம். அதாவது, வேட்பாளர்கள் தந்த பணத்தையும், பொருட்களையும் வாங்கி விட்டோம்; ஓட்டு போடவில்லை என்றால், வேட்பாளர்கள் கண்டுபிடித்து காரணம் கேட்பார்கள் என்ற பயம் மக்களிடம் இருந்துள்ளது. மேலும், கொடுத்த பணத்தை திரும்ப பெற்று கொள்வார்களோ என்ற அச்சமும் மக்களிடம் இருந்திருக்கிறது. இந்த பயத்தின் காரணமாகவும், கும்பல், கும்பலாக வந்து தவறாமல் ஓட்டு போட்டுள்ளனர்.
* முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிக ஆர்வமாக வந்து ஓட்டு போட்டதை காண முடிந்தது. குறிப்பாக, காலையில் ஓட்டுப்பதிவு துவங்கிய உடனேயே, முதல் முறையாக ஓட்டளிக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கும்பல் கும்பலாக வந்து ஓட்டு போட்டனர்.
இதுவும், ஓட்டு பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். வழக்கமாக, ஓட்டு போடுவதற்கோ, அரசியல் பற்றி தெரிந்து கொள்வதற்கோ துளியும் ஆர்வம் காட்டாமல், சினிமா, கிரிக்கெட் என தனி உலகத்தில் இளைய சமுதாயத்தினர் இருந்தனர். தற்போது ஓட்டளித்ததற்கு விஜயும், அவர் துவக்கிய கட்சியுமே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது, மூன்றாவது காரணம்.
* தற்போது ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதற்கு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நான்காவது காரணம். இறந்த வாக்காளர்கள், 20,798 பேர், இடம் பெயர்ந்த மற்றும் வீடுகளில் இல்லாத வாக்காளர்கள், 80,645 பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருந்த, 2,024 பேர் என, மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப் பட்டிருந்தனர்.
* எஸ்.ஐ.ஆர்., பணியின்போதே, 1 லட்சம் பேரை நீக்கி விட்டனர். ஓட்டு போடாமல் இருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களை நீக்கி விட்டால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாதோ என்ற அச்சத்தில், ஓட்டுச்சாவடிக்கு ஓடி வந்து ஓட்டு போட்டுள்ளனர். இது, ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதற்கு ஐந்தாவது காரணம்.
* தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அயராத முயற்சியும், உழைப்பும் ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதற்கு 6வது முக்கிய காரணமாகும். ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதிகாரிகள் ஓயாமல் உழைத்தனர். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan