Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோத ஊடுருவலை தடுக்க மேற்கு வங்க முதல்வர் அதிரடி!

சட்டவிரோத ஊடுருவலை தடுக்க மேற்கு வங்க முதல்வர் அதிரடி!

12 வைகாசி 2026 செவ்வாய் 12:34 | பார்வைகள் : 150


மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட விரோத ஊடுருவலை தடுக்க, மாநிலத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்க, எல்லை பாதுகாப்பு படைக்கு நிலத்தை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மத்திய பா.ஜ., அரசின், 'ஆயுஷ்மான் பாரத், பி.எம்., ஸ்ரீ' போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் முதல் பா.ஜ., முதல்வராக சமீபத்தில் பதவியேற்றார்.

மேலும், பா.ஜ.,வைச் சேர்ந்த திலீப் கோஷ், அக்னிமித்ரா பவுல் உள்ளிட்ட ஐந்து பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், கொல்கட்டாவில் உள்ள தலைமை செயலகத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஐந்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின், முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேற்கு வங்கம் முறைப்படி இணைகிறது.

இதன்படி, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதே போல், பி.எம்., ஜன் ஆரோக்ய யோஜனா, பயிர் காப்பீட்டுக்கான, பி.எம்., பசல் பீமா யோஜனா, பள்ளிகளை மேம்படுத்தும் பி.எம்., ஸ்ரீ திட்டம், கைவினைஞர்களுக்கான, பி.எம்., விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், இனி மாநிலத்தில் தங்கு தடையின்றி செயல்படுத்தப்படும்.

இந்த நலத்திட்டங்களுக்கு, அரசியல் காரணங்களுக்காக மம்தா பானர்ஜியின் முந்தைய திரிணமுல் காங்., அரசு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க, மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய - வங்கதேச எல்லையில் வேலி அமைக்க, எல்லை பாதுகாப்பு படைக்கு நிலம் ஒதுக்க உத்தரவிடப்படுகிறது.

நிலத்தை ஒப்படைக்கும் பணிகளை, 45 நாட்களுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நாட் டில் அமல்படுத்தி உள்ளது.

இந்த சட்டங்களையும் முறையாக அமல்படுத்தாமல், அரசியலமைப்பு சட்டத்தை மம்தா பானர்ஜி மீறி உள்ளார். இனி, புதிய குற்றவியல் சட்டங்கள் மாநிலத்தில் உடனடியாக அமலுக்கு வரும்.

மேலும், அரசு பணிகளுக்கான பொது பிரிவு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, 40-லிருந்து 45- ஆகவும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கு, 43-லிருந்து 48 -ஆகவும் உயர்த்தப்படுகிறது.

பார்லி.,யில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தடுக்கவே, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய திரிணமுல் காங்., அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது கணக்கெடுப்பு பணிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேசத்துடன், 4,097 கி.மீ., துார எல்லையை நம் நாடு பகிர்ந்து கொள்கிறது. இதில், 2,217 கி.மீ., துார எல்லை பகுதி மேற்கு வங்கத்தை உள்ளடக்கியது. மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, இதில், 1,648 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 569 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கப்படவில்லை. இது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என, பா.ஜ., தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது. எல்லையில் வேலி அமைப்பதற்கு நிலம் ஒதுக்க முந்தைய திரிணமுல் அரசு காலம் தாழ்த்தி வந்த நிலையில், பதவியேற்ற சில நாட்களிலேயே பா.ஜ., அரசு நிலம் ஒதுக்கி உள்ளது.

மேற்கு வங்கத்தின் புதிய தலைமை செயலராக, மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தலைமையில் தான், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்டசபை தேர்தல் நடந்தது. 1990- பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஜூலையில் ஓய்வு பெறுகிறார். நேற்று மாலை தலைமை செயலராக முறைப்படி பொறுப்பேற்றார். தலைமை செயலராக இருந்த துஷ்யந்த் நாரியாலா, டில்லியில் உள்ள, மாநில முதன்மை ரெசிடென்ட் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.